2023 முதல் 2027 வரையான ஐந்தாண்டு காலம் உலக வரலாற்றில் மிக வெப்பமான 5 ஆண்டுகளாக இருக்கும் என ஐ.நா.வின் உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டு காலம் இதுவரை இல்லாத அளவு மிக வெப்பமான ஐந்தாண்டு காலமாக இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. புதன்கிழமை ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பசுமை இல்ல வாயுக்களும் எல் நினோவும் இணைந்து வெப்பநிலையை உயர்த்தும் காரணிகளாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.
"உலக வெப்பநிலை விரைவில் பாரிஸ் காலநிலை ஒப்பந்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட லட்சிய இலக்கை மீறும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒன்று அவ்வாறு செய்ய மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்பு உள்ளது" என்று ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது.
2015 மற்றும் 2022 க்கு இடைப்பட்ட எட்டு வருடங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்ட வெப்பமான எட்டு ஆண்டுகளாக இருந்துள்ளன எனவும் அறிக்கை கூறுகிறது. ஆனால் காலநிலை மாற்றம் துரிதமாகிவருவதால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
"அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது ஒரு வருடமோ, அல்லது ஐந்தாண்டு காலமுமோ இதுவரை பதிவு செய்யப்பட்டதில் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்க 98 சதவீதம் வாய்ப்பு உள்ளது" எனவும் ஐ.நா.வின் அறிக்கை தெரிவித்துள்ளது.2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை மாநாட்டில் போட்டப்பட்ட உடன்படிக்கையில், புவி வெப்பத்தை 1850 மற்றும் 1900 க்கு இடையில் அளவிடப்பட்ட சராசரி அளவைவிட 1.5 - 2 டிகிரி செல்சியஸுக்குக் மேல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், 2022ஆம் ஆண்டு உலகளாவிய சராசரி வெப்பநிலை 1850-1900 சராசரியை விட 1.15 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. 2023-2027 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு, புவி மேற்பரப்பு வெப்பநிலை 1.5C ஐ விட அதிகமாக இருக்க 66 சதவீத வாய்ப்புகள் இருக்கிறது. ஐந்து வருடங்களும் 1.1C முதல் 1.8C வரை அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
"உலகின் வெப்பநிலை நிரந்தரமாக பாரிஸ் உடன்படிக்கையின் அளவுகோலை மீறும் என்று கூறப்படவில்லை என்றாலும், தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பைத் தாண்டும்" என ஐ.நா.வின் அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்த உலக வானிலை அமைப்பின் தலைவர் பெட்டேரி தாலாஸ் சொல்கிறார்.
"வரவிருக்கும் மாதங்களில் எல் நினோ உருவாகி வெப்பமயமாதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மனிதர்களால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்துடன் இணைந்து உலகளாவிய வெப்பநிலையை உயர்த்தும். பசுமை இல்ல வாயுக்கள் என்று அழைக்கப்படும் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றால் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும். இது சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்." என்றும் அறிக்கை கூறுகிறது.
ஜூலை மாத இறுதியில் எல் நினோ உருவாகும் வாய்ப்பு 60 சதவீதமாக இருக்கும் என்றும், செப்டம்பர் மாத இறுதிக்குள் அது 80 சதவீதமாக உயரும் என்றும் இந்த மாத தொடக்கத்தில் கூறப்பட்டது. பொதுவாக, எல் நினோ காலத்தில் உலகளாவிய வெப்பநிலையை அதிகரிக்கும். கடந்த மூன்று ஆண்டுகளில் லா நினா நிலைமைகளின் குளிர்ச்சியான தாக்கம் இருந்தபோதிலும், கடந்த எட்டு ஆண்டுகளில் 2015 - 2016 வரை மிகவும் வெப்பமான ஆண்டுகளாக இருந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பூமத்திய ரேகையை பகுதியில் மத்திய பசிபிக் பெருங்கடல் பெருங்கடல் பரப்பின் வெப்பம் அதிகரிக்கும் நிகழ்வு எல்-நினோ என்று அழைக்கப்படுகிறது. மத்திய பசிபிக் பெருங்கடலில் சராசரி வெப்ப நிலை 0.5 டிகிரி செல்சியஸ் ஆகும். இங்கு சராசரியைவிட அதிகமான வெப்பநிலை 5 மாதங்களுக்கு மேல் நீடித்தால் அது எல்-நினோ எனப்படுகிறது. இந்த வெப்பநிலை சராசரிக்கும் குறைவாக இருந்தால் லா நினா எனப்படுகிறது