அதற்குள் இப்படி ஒரு ஆபத்தா...!! அட ஆண்டவா எப்படி தாங்கும் இந்த உலகம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 11, 2020, 10:27 AM IST
Highlights

இந்த ஆண்டு covid-19 நெருக்கடியால் சுமார் 4.9 கோடி மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்படுவர், உணவு மற்றும் ஊட்டச்சத்து கிடைக்காத மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார்

உலக அளவில் covid-19 நெருக்கடி காரணமாக சுமார் 4.9 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீத வீழ்ச்சி கூட மில்லியன் கணக்கான குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சுமார் 200க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 73 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கிட்டத்தட்ட நான்கு லட்சத்தி 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரசால் அமெரிக்கா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும்  20 லட்சத்து 49 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு உலக நாடுகள் இந்த வைரஸை கட்டுப்படுத்த எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும், அது கட்டுக்கடங்காமல் கொத்துக்கொத்தாக மக்களை தாக்கி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு நாடுகள் முழு அடைப்பை நடைமுறைபடுத்தியதால், உலக நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள  ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் உலகளாவிய உணவு பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், கடுமையான உலகளாவிய உணவு பஞ்சம் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் நீண்டகாலத்திற்கு மில்லியன் கணக்கான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மோசமான தாக்கத்தை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். உலகில் 7.8 பில்லியன் மக்களுக்கு உணவு அளிக்கப் போதுமான உணவு கிடைக்கிறது, ஆனால் தற்போது 82 கோடிக்கும் அதிகமான மக்கள் பசியுடன் உள்ளனர் என்றார்.

  

மேலும் 5 வயதிற்கு குறைந்த 14.4 கோடி குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை, மொத்தத்தில் உலகளாவிய உணவுமுறை சரிந்து வருகிறது, தொடரும் covid-19 நெருக்கடி நிலைமையால் மேலும் இது மோசமாகி  வருகிறது, இந்த ஆண்டு covid-19 நெருக்கடியால் சுமார் 4.9 கோடி மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்படுவர், உணவு மற்றும் ஊட்டச்சத்து கிடைக்காத மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார். மேலும், உலகளவிலான மொத்த உற்பத்தியில் ஒவ்வொரு சதவீதமும் 7 லட்சம் கூடுதல் குழந்தைகளால் வீழ்ச்சியடைந்து வருகிறது என்ற அவர், ஏராளமான உணவு தானியங்களை கொண்ட நாடுகளில் கூட உணவு விநியோக சங்கிலி சீர்குலைந்துள்ளது என எச்சரித்தார். எனவே இந்த தொற்று நோயின் மோசமான உலகளாவிய விளைவுகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளில் நாடுகள் இறங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய  குட்டரெஸ், மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற நாடுகள் விரைந்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதிக பட்ச ஆபத்து உள்ள இடங்களில், அந்நாடுகள் அதிகம் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். அதாவது  மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில் அவர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை கட்டாயமாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

click me!