ஆஸ்திரேலியாவுக்கு அடியோடு ஆப்பு வைத்த சீனா...!! நாட்டையே முடக்க பயங்கர பிளான்..!!

By Ezhilarasan Babu  |  First Published Jun 10, 2020, 1:15 PM IST

ஆஸ்திரேலியாவில், சீனா மற்றும் ஆசிய மக்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து இருக்கிறது, எனவே அந்நாட்டிற்கான பயணங்கள் குறித்து மக்கள் யோசிக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.


தொற்றுநோய் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய நாட்டில் படிக்க செல்லும் சீன மாணவர்கள் அங்குள்ள அபாயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என அந்நாடு எச்சரித்துள்ளது. கொரோனா விவகாரத்தில்  சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியதுடன், உலக சுகாதார நிறுவன கூட்டத்தில் அதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ள நிலையில் சீனா இவ்வாறு தங்கள் நாட்டு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பேரிழப்புக்கும் சீனா தான் காரணம் எனவும்,  இந்த வைரஸ் பரவலுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும்,  சீனா திட்டமிட்டே இந்த வைரஸை பரப்பியது, வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சுமத்தி வந்த நிலையில், கொரோனா விவகாரத்தில்  சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஆஸ்திரேலியா வலியுறுத்தியதுடன் அதற்கான தீர்மானத்தையும் கொண்டுவந்தது.

Tap to resize

Latest Videos

இதனால் சீனா ஆஸ்திரேலியா இடையேயான உறவு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது,  சீனாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கையால் ஆஸ்திரேலியா மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்த நிலையில், ஆஸ்திரேலிய பொருட்கள் மீது இறக்குமதி கட்டணங்களை சீனா அதிகரித்துள்ளது.  ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் செய்வது குறித்து தனது குடிமக்களை எச்சரித்தும் வருகிறது. ஆஸ்திரேலிய பொருளாதாரம் 50 சதவீதம் அளவிற்கு சீனாவையே சார்ந்துள்ளது. இதை மேற்கோள்காட்டி ஆஸ்திரேலியாவை எச்சரித்த சீனா பொருளாதார ரீதியாக ஆஸ்திரேலியாவை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில்  சீனாவின் கல்வி அமைச்சகம், சீன மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் செல்வதை எச்சரித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் சீன மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு படிக்க செல்வது குறித்து பரிசீலிக்க வேண்டும், ஆஸ்திரேலியாவுக்கு சென்று திரும்பும் போது மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், உலகளவில் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் ஆஸ்திரேலிய  பயணம் குறித்து மாணவர்கள் யோசிக்க வேண்டும் என கூறியுள்ளது. 

இந்நிலையில் கடந்த வாரம் சீன அரசு சீன குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது, அதில் ஆஸ்திரேலியாவில், சீனா மற்றும் ஆசிய மக்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து இருக்கிறது, எனவே அந்நாட்டிற்கான பயணங்கள் குறித்து மக்கள் யோசிக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. அதேபோல் சீன கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் சீன சுற்றுலா பயணிகள் தங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் மீது இனவெறி துவேஷம் மற்றும் தாக்குதல்கள் நடந்து வருவதாகவும், ஏப்ரல் மாதம் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாகவும் சீனா மேற்கோள் காட்டியுள்ளது. மற்ற எந்த நாடுகளையும் விட ஆஸ்திரேலியாவில்  சீன மாணவர்களே அதிகம் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா கல்வி சந்தை ஆராய்ச்சி குழுவான ஐ.சி.இ.எஃப் ஆய்வின்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் அனைத்து சர்வதேச மாணவர் சேர்க்கைகளில் சுமார் 28% பேர் சீன மாணவர்கள் என கூறியுள்ளது. 

சீன மாணவர்கள் ஒருவேளை ஆஸ்திரேலியாவில் படிப்பதை நிறுத்திக் கொண்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் ஆஸ்திரேலிய மதிப்பில் 12 பில்லியன் டாலர் அளவுக்கும் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும், அது அமெரிக்க டாலரில் 6.5 பில்லியன் முதல் 8.3 பில்லியன் டாலர் அளவிற்கு இழக்க நேரிடும் எனவும் சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் சால்வடோர் பாபோன்ஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு சீன அரசு வழங்கியுள்ள ஆலோசனை, ஏற்கனவே நெருக்கடியான சூழலில் உள்ள மாணவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது  என்று ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் கூட்டணியான எட்டு குழுவின் தலைமை நிர்வாகி விக்கி தாம்சன் கூறியுள்ளார். அதாவது ஆஸ்திரேலியாவில் அவர்களது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று மாணவர்கள் சொந்தமாக யோசித்து முடிவு எடுப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும், மாணவர்களுக்கு தேவையான  சுகாதார சேவைகளை எங்களால் உறுதி செய்ய முடியும் எனவும், மாணவர்களின் வருகையை  எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய  கல்வி அமைச்சர் டான் தெஹான் சர்வதேச நாடுகளுக்கு ஆஸ்திரேலியா பிரபலமான இடமாக உள்ளது, ஏனெனில் நாங்கள் சர்வதேச மாணவர்களை வரவேற்று உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் வெற்றிகரமான பன்முக கலாச்சார சமூகம் என அவர் கூறியுள்ளார்.

 

click me!