அந்த வரிசையில் ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட உக்ரைனுக்கு முழு ராணுவ உதவி வழங்குவதாக நேட்டோ உறுதி அளித்து இருக்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் நடவடிக்கை காரணமாக அந்த நாடு மட்டும் இன்றி மற்ற நாடுகளுக்கும் வீண் சேதம் மற்றும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் மீதான போரில் ரஷ்யா இதுவரை மூன்றில் ஒரு பங்கு படைபலத்தை இழந்து இருக்கலாம் என இங்கிலாந்து பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் உளவுத் துறை வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ரஷ்யா படைகள் உக்ரைனுக்குள் நுழைய தாக்குதல் நடத்த துவங்கியது. ரஷ்ய தாக்குதலை எதிர்த்து உக்ரைனும் எதிர் தாக்குதலை மேற்கொண்டது.
நேட்டோ உறுதி:
ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் ராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட உக்ரைனுக்கு முழு ராணுவ உதவி வழங்குவதாக நேட்டோ உறுதி அளித்து இருக்கிறது.
முன்னதாக பெர்லினில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் கூட்டத்தில் நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னலெனோ பேர்பாக் உக்ரைன் நாட்டிற்கு போரில் தற்காப்புக்கு தேவைப்படும் ராணுவ உதவிகளை ஜெர்மனி வழங்கும் என தெரிவித்தார்.
உக்ரைன் வெற்றி:
இதை அடுத்து பேசிய நேட்டோ அமைப்பு தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க், “ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்தினர் தங்கள் நாட்டை பாதுகாக்க தைரியமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி வாகை சூட முடியும்,” என தெரிவித்து இருக்கிறார்.
நேட்டோவில் இணைவதாக பின்லாந்து அறிவித்ததை அடுத்து ஸ்வீடனும் பின்லாந்துடன் இணைந்து நேட்டோவில் சேர விண்ணப்பிப்பதாக தெரிவித்து இருக்கிறது. “ஸ்வீடன் பாதுகாப்புக்கு சிறந்த விஷயம், நாங்கள் இப்போது உறுப்பினராக விண்ணப்பிக்கிறோம், நாங்கள் இதை பின்லாந்துடன் சேர்ந்து கொண்டு செய்கிறோம்,” என ஸ்வீடன் பிரதமர் மக்டலெனா ஆண்டர்சன் தெரிவித்தார்.