துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்க உயிரிழப்புகள் 50 ஆயிரத்துக்கு மேல் உயரக்கூடும் என்று ஐ.நா. நிவாரண நிதியின் தலைவர் கூறியுள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயர வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. நிவாரண நிதியின் தலைவர் மார்ட்டின் க்ரிபித்ஸ் தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் பிப்ரவரி 6ஆம் தேதி அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் வரை பதிவான இந்த நிலநடுக்கத்தில் 28 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.
அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அளித்துள்ள தகவல்களின்படி, துருக்கியில் இதுவரை 24,617 பேரும் சிரியாவில் 3,574 பேரும் என 28,191 பேர் நிலநடுக்கத்தில் இறந்துள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் துருக்கிக்கும் சிரியாவுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பேரிடர் மீட்புப் படையின் இடுபாடுகளுக்குள் மாட்டிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 50 ஆயிரத்தையும் எட்டவோ இன்னும் அதிகரிக்கவோகூட வாய்ப்பு இருப்பதாக ஐ.நா. நிவாரண நிதியின் தலைவர் மார்ட்டின் க்ரிபித்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.
ஐ.நா. தரப்பில் பலி எண்ணிக்கையைக் கணக்கிடும் பணி தொடங்கப்படவில்லை என்றும் க்ரிபித்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 8.7 லட்சம் மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி தேவைப்படுவதாகவும் இவர்களில் 5.3 லட்சம் பேர் சிரியாவில் உள்ளனர் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இந்த நிலநடுக்கத்தால் 2.6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் செய்ய 42.8 பில்லியன் டாலர் நிதி உடனடியாகத் தேவைப்படுகிறது என்றும் கூறி இருக்கிறது.
துருக்கியில் உள்நாட்டைச் சேர்ந்த 32 ஆயிரம் பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் 8,294 பேரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மீட்பு நிறுவனம் சொல்கிறது.
Turkey Earthquake: துருக்கி நிலநடுக்கத்தில் மாயமான இந்தியர் சடலமாக மீட்பு