"மக்கள் எப்போதும் உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள், உங்கள் நேர்மை காரணமாக நான் உங்களை நேசிக்கிறேன், திறம்பட நான்காண்டுகள் செயல்பட்டதற்காக நான் உங்களை மதிக்கிறேன்"
குடியரசு கட்சியின் ஜனாதிபதி பதவிக்கு இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்டு முறையாக ஏற்றுக் கொண்டார். வெள்ளை மாளிகையில் ஏராளமான மக்கள் முன்னிலையில் ட்ரம்ப் தான் வேட்பாளராக நியமிக்கப்பட்டதை முறையாக ஏற்றுக்கொண்டார். அந்நிகழ்ச்சியில் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் குறித்து பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
உலகின் மிகப்பெரிய வல்லரசும் ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் வரும் நவம்பர்-3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நெருக்கடியான நிலையிலும் அமெரிக்கா தேர்தலை சந்திக்க உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களத்தில் நிற்கிறார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் ஜனாதிபதி பதவிக்கு இரண்டாவது முறையாக களமிறங்குகிறார். இந்நிலையில் அவரை அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவிப்பதற்கான நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அதில் ஏராளமான மக்கள் முன்னிலையில் ட்ரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், அதை ட்ரம்ப் மக்கள் முன்னிலையில் ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் உரையாற்றியதாவது, என் மீது, எனது கட்சியினரும், எனது சகாக்களும் அன்பையும், நம்பிக்கையும் வைத்திருக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் என்ற இந்த அறிவிப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களின் ஆதரவுடன் அசாதாரணமான காரியங்களை செய்திருக்கிறேன். அதில் அமெரிக்கா அசாதாரணமான முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது.
அதனால்தான் மீண்டும் உங்கள் ஆதரவுடன் இந்த இரவில் உங்களோடு நான் நிற்கிறேன். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் பெருமிதம் கொள்கிறேன். அடுத்த நான்கு ஆண்டுகளும் அமெரிக்காவிற்கு பிரகாசமான எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என அவர் தெரிவித்தார். பிறகு ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப், தனது மகள் இவாங்கா ட்ரம்பை அறிமுகப்படுத்தினார், பின்னர் மேடையில் பேசிய இவாங்கா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் என் தந்தையிடம் கூறினேன், நான்கு ஆண்டுகள் கழித்து நான் உங்களுடனேயே நிற்பேன் என தெரிவித்தேன். அதேபோல் இப்போது நான் அவருடன் நிற்கிறேன் என கூறினார். ட்ரம்ப் குறித்து பேசிய அவர், "மக்கள் எப்போதும் உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள், உங்கள் நேர்மை காரணமாக நான் உங்களை நேசிக்கிறேன், திறம்பட நான்காண்டுகள் செயல்பட்டதற்காக நான் உங்களை மதிக்கிறேன்" என ட்ரம்பை பார்த்து மகள் இவாங்கா உணர்ச்சி பொங்க கூறினார். மேலும் தெரிவித்த அவர், ஒருபோதும் வாஷிங்டன் டொனால்ட் ட்ரம்ப்பை மாற்றவில்லை, டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டனை மாற்றினார் என இவான்கா கூறினார். அவரது பேச்சுக்கு எதிரில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.