அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளை காவல்துறை அதிகாரி ஒருவரால் ஏழு முறை சுடப்பட்ட சம்பவம் அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளை காவல்துறை அதிகாரி ஒருவரால் ஏழு முறை சுடப்பட்ட சம்பவம் அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேக்கப் பிளேக் என்ற 29 வயது இளைஞர் மீது காவல்துறை அதிகாரி கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அக்கருப்பின இளைஞர் மீது நடத்தப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஸ்கான்சின் மாகாணம் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த விஸ்கான்சின் மாகாணத்தில் தலைமை அரசு வழக்கறிஞர், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரியின் பெயர் ரஸ்டன் ஷொஸ்கி என்றும், அவர் கடந்த 7 ஆண்டுகளாக கென்னோஷா நகர காவல் துறையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தை சேர்ந்த ஜேக்கப் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது தோழியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து அவரை சந்திக்க விரும்பவில்லை என்று ஜேக்கப்பின் தோழி காவல் துறையினரை அழைத்து கூறியதாக தெரிகிறது, இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜேக்கப்பை கைது செய்ய முயற்சித்துள்ளனர், ஒருகட்டத்தில் அவர் மீது மின்னதிர்ச்சி மூலம் தற்காலிக பக்கவாதத்தை உண்டாக்கும் கருவியை பயன்படுத்தியுள்ளனர், அதன் பிறகு காவல்துறை அதிகாரிகளை கடந்து தனது காரின் கதவை திறந்த ஜேக்கப்பின் பின்புறத்தில், ரஸ்டன் ஷொஸ்கி என்ற அதிகாரி ஏழு முறை துப்பாக்கியால் சுட்டார்.
ஏற்கனவே கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டதால், உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன, மின்னசோட்டா தலைநகர் மினியாப்பொலிஸ்ஸில் 46 வயதான ஜார்ஜ் பிளாய்டு, காவல்துறையின் பிடியில் கழுத்து நெறிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள் தனிவதற்குள் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்டுள்ள துப்பாக்கி சூட்டை கண்டித்து அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் மாறியுள்ளது. காவல்துறை வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளை போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக, அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ள நிலையில், வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
29 வயதான ஜேக்கப் பிளேக், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ வைரல் ஆகிவந்த நிலையில், கெனோஷா நகரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டுமென ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோதிடன் வலியுறுத்தியுள்ளார். அந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரது குழந்தைகள் காரில் இருந்து அதை நேரில் பார்த்துக் கதறினர். இந்நிலையில் மீண்டும் நாங்கள் வெட்கப்படுகிறோம் எங்களுக்கு ஒரு முழுமையான வெளிப்படையான விசாரணை வேண்டும் என போராட்டக்காரர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.