1962 போருக்கு பின்னர் இந்தியா- சீனா இடையேயான உறவு கடுமையானது..!! வெளியுறவுத்துறை அமைச்சர் அதிரடி..!!

By Ezhilarasan Babu  |  First Published Aug 27, 2020, 3:46 PM IST

இந்தியா-சீனா  ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே 1962-ல் ஏற்பட்ட போருக்குப் பின்னர் உறவு சுமுகமானதாக இல்லை, அதிலும் சமீபகாலமாக சீனாவின் அணுகுமுறைகள் கடுமையாகவே இருந்து வருகிறது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


இந்தியா-சீனா  ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே 1962-ல் ஏற்பட்ட போருக்குப் பின்னர் உறவு சுமுகமானதாக இல்லை, அதிலும் சமீபகாலமாக சீனாவின் அணுகுமுறைகள் கடுமையாகவே இருந்து வருகிறது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். " தீ இந்தியா வே" மற்றும் நிச்சயமற்ற உலகத்திற்கான உத்திகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு  அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார்,  அப்போது அவர் கூறியதாவது:-  கிழக்கு லடாக்கில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்க ராணுவ மற்றும் ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அப்படி பேச்சு வார்த்தைக்குப் பின்னரும் ஒரு சில பகுதிகளில் இருந்து மட்டுமே சீனா படைகளைத் திரும்பப் பெற்றுள்ளன. மே 20-ஆம் தேதி முதல் இரு நாட்டுப் படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் ஜூன் 15 அன்று ஜவான்களிடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிற்காக ஈந்தனர். எல்லையில் அமைதியை பேணுவது, இருநாடுகளுக்கும் இடையிலான உறவின் அடிப்படை நிபந்தனைகளில் ஒன்று என்பதை சீனாவிடம் பலமுறை நாம் வலியுறுத்திக் கூறியுள்ளோம், அத்துடன் கடந்த மூன்று மாதங்களாக ராணுவம் மற்றும் ராஜதந்திர  ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தும் கிழக்கு லடாக்கில் இருந்த சில பகுதிகளில் இருந்து  சீனா படைகளை பின்வாங்க மறுத்து வருகிறது. எப்போது எல்லையில் பதற்றம் ஏற்பட்டாலும் அது ராஜதந்திர பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படுகிறது. குறிப்பாக டெஸ் பாங்க், டோக்லாம் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனை இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். ஆனால் அனைத்து சர்ச்சைகளும் ராஜதந்திர உதவியுடன் தீர்க்கப்பட்டு வருகிறது என்றார். 

மேற்கில் பனிச் சிகரங்களில் இருந்து கிழக்கில் அடர்ந்த காடுகள் மற்றும் மலைகள் வரை சுமார் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது. இதை தீர்க்கவே பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடந்தி வந்தோம். ஆனால் இதுவரை எந்த தீர்வும் அதில் எட்டப்படவில்லை. மொத்தத்தில் சீனாவுடன் 1962 போருக்குப் பின்னர் உறவுகள் மோசமடைந்துள்ளன. சீனாவின் அணுகு முறைகள் அனைத்தும் கடுமையாக உள்ளன என அவர் குற்றஞ் சாட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர்  இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெயிட்டோங் கூறுகையில்,  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மிகவும் அவசியமானது, இருநாடுகளும் நட்புடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம், இந்தியாவுடன் இணைந்து செயல்பட எப்போதும் சீனா தயாராக உள்ளது. வேறுபாடுகளை கலைந்து இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது உலகத்தின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பெரிதும் உதவும் என அவர் தெரிவித்துள்ள நிலையில், ஜெய்சங்கர் சீனாவின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!