உலகளவில் கொரோனா வேகம் குறைகிறது..!! WHO-வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 27, 2020, 10:03 AM IST
Highlights

உலகில் கொரோனா வைரசின் வேகம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் கொரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலகில் கொரோனா வைரசின் வேகம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் கொரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கடந்தாண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவே இந்த வைரசால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நோய்த்தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கையும், அதன் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, எனினும் தென்கிழக்கு ஆசியா, மத்தியதரைக்கடல் பகுதிகளைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் அந்த நோய்த்தொற்று பரவலின் தீவிரம் குறைந்து வருகிறது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இது முந்தைய வாரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட தொற்று எண்ணிக்கையைவிட 4 சதவீதம் குறைவாகும். அந்த காலகட்டத்தில் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இதுவும் முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 12% குறைவாகும், கொரோனா நோய்த் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது பிரதேசமான தென்கிழக்காசியாவில்  உலகளவில் 15 சதவீதம் அளவுக்கு கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் உலக கொரோனா நோயாளிகளில் 28 சதவீதத்தினர் அந்தப் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அந்தப் பிராந்தியத்தில் இந்தியா அதிக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. நேபாளத்திலும் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. 

மத்திய தரைக்கடல் பிராந்தியத்தை பொறுத்தவரை முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் கடந்த வாரத்தில் புதிய கொரோனா நோய்தொற்று எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் அந்தப் பிராந்தியத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த 6 வாரங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளிலும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையும் முந்தைய  வாரத்தை விட கடந்த வாரத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் முந்தைய வாரங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது, ஆனால் கடந்த வாரத்தில் அதன் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. மேலும் அந்தப் பிராந்தியத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
 

click me!