சீனாவின் விமான நடவடிக்கைகளை கண்காணிக்க இந்தியா முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது.
சீன போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்திய வான்வெளியில் நுழைய முயன்றால், அதை சுட்டு வீழ்த்தும் வகையில் கிழக்கு லடாக் எல்லை கட்டுப்பாட்டு வரிசையில் இந்தியா சிறியவகை வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றை பாதுகாப்பு படை வீரர்கள் தோளில் வைத்து சுட்டு வீழ்த்தும் வகைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
கடந்த ஜூன் 15 ஆம் தேதி இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதனையடுத்து இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்தது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் உருவானது இதனையடுத்து இரு நாட்டு ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து எல்லையிலிருந்து இருநாடுகளும் படைகளை பின் வாங்க முடிவு செய்தன. அதைத்தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து சீனா படைகளை திரும்பப் பெற்றது. ஆனாலும் பாங்கொங் த்சோ ஏரி, பிங்கர்-4 பகுதிகளிலிருந்து படைகளை பின்வாங்க சீனா மறுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பாதுகாப்பு படை தலைவர், பிபின் ராவத், இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி சீனா படைகளை திரும்ப பெறாவிட்டால், இந்தியா ராணுவ நடவடிக்கைக்கு தயாராக உள்ளது என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் மீண்டும் நிலைமை பதற்றமாகி வருகிறது. அடிக்கடி சீன ஹெலிகாப்டர்கள், போர்விமானங்கள், இந்திய எல்லைக்கு அருகில் வட்டமடித்துச் செல்கின்றன. இதுகுறித்து இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பலமுறை எச்சரித்துள்ளனர் ஆனாலும் சீனாவில் இந்த நடவடிக்கை ஓயவில்லை, ஏற்கனவே எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவதில் இந்தியா தீவிரம் காட்டி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு அமைப்புகளை எல்லையில் நிறுத்தும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. சீனாவின் விமான நடவடிக்கைகளை கண்காணிக்க இந்தியா முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்தியா ரேடார் மற்றும் அதன் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தி உள்ளது. அதேபோல் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் சீனாவுக்கு பதிலளிக்கும் விதமாக சீன எல்லையை ஒட்டி சுகோய் போர் விமானங்களை, இந்தியா நிறுத்தியுள்ளது. 58 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரான்சிடமிருந்து பெறப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்களை இந்தியா எல்லையில் நிலைநிறுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் சீன ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் எல்லையில் அத்துமீறும் நிலையில், அதை சுட்டு வீழ்த்த ஏதுவாக வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா எல்லையில் நிறுவிவருகிறது. படைவீரர்கள் தங்கள் தோள் மீது வைத்து இயக்கம் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் விமானப்படை ஆகிய இரண்டு படைப் பிரிவுகளிலும் அது பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் பிரத்தியேகமாக ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஏழு விமானத் தளங்களையும் இந்தியா கண்காணித்து வருகிறது. ஆதாரங்களின்படி, சீனா, ஹோடன், கர்குசா, காஷ்கர், ஹோப்பிங், டங்கா ஜாங், லிஞ்சி மற்றும் பனகட் ஆகிய 7 விமான தளங்களை இந்திய உளவுபிரிவு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. வடகிழக்கின் மறுபுறம் உள்ள லின்ஷி விமானத் தளம் முதன்மையான ஒரு ஹெலிகாப்டர் விமானத் தளமாகும். இந்த பகுதியில் நிகர்னியின் செயல்பாட்டை அதிகரிக்க PLAAF ஹெலிபேட்களின் வலையமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த விமான நிலையங்களின் செயல்பாடுகள் அனைத்தும் சமீபத்திய காலங்களில் வேகமெடுத்துள்ளது குறிப்பிடதக்கது.