நான் தோற்றால் அது அமெரிக்காவுக்கு மோசமான காலம்..!! ட்ரம்ப் திட்டவட்டம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 14, 2020, 6:43 PM IST
Highlights

ட்ரம்ப் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகமென கருத்துக் கணிப்புகளும், அரசியல் வல்லுநர்களும் கூறிவருகின்றனர். ஆனால் அதையெல்லாம் சரிக்கட்ட ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்

நவம்பர் மாத தேர்தலில் தான் தோல்வியடைந்தால் அது நாட்டிற்கு மிக  மோசமானதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு  ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, உலகளவில் 78 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 4 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரஸால் அமெரிக்காவே மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இதுவரை அங்கு மட்டும் சுமார் 21 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் நிலைகுலைய செய்துள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இந்த வைரஸ் தொடர்பான சர்ச்சை புதிய பனிப்போரை உருவாகியுள்ளது, குறிப்பாக ட்ரம்ப் பதவியேற்ற மூன்று ஆண்டுகாலம்  அமைதியாகவும் வளமாகவும் இருந்தது, ஆனால் சமீபத்திய கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர்.  தொடர்ஊரடங்கால் ஏற்பட்ட சேதத்தால் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அதுமட்டுமின்றி ஆப்பிரிக்கா, அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டின் மரணம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிறவெறிக்கெதிரான போராட்டம் போன்றவை அடுத்தடுத்து அதிபர் ட்ரம்புக்கு  நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில், குடியரசுக் கட்சியின் சார்பில் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை குடியரசுத் தலைவருமான ஜோ பிடனை எதிர்கொள்ள உள்ளார். இந்நிலையில் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடும்  ஜோ பிடனுக்கு  மக்கள் மத்தியில் பரவலான ஆதரவு இருந்துவருகிறது.

இதனால் ட்ரம்ப் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகமென கருத்துக் கணிப்புகளும், அரசியல் வல்லுநர்களும் கூறிவருகின்றனர். ஆனால் அதையெல்லாம் சரிக்கட்ட ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார், இந்நிலையில்  அண்மையில் ட்ரம்ப் பற்றி  பேசிய  ஜோ பிடன், எதிர்வரும் தேர்தலில் தோல்வியடைந்தாலும் ட்ரம்ப் ஒப்புக்கொள்ளமாட்டார், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேரமாட்டார். அவரால் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாது, எனவே தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சி செய்வார் என கூறினார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் இதுகுறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நான் அதிபர் தேர்தலில் ஒருவேளை தோல்வி அடைந்தால் வெள்ளை மாளிகையை விட்டு அமைதியாக வெளியேறுவேன். வேறு வேலைகளை பார்க்கச் சென்று விடுவேன், அதேநேரத்தில் என்னுடைய தோல்வி அமெரிக்காவுக்கு மிக மோசமானதாக இருக்கும், அது நமது நாட்டுக்கு மோசமான காரியமாக  இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என அவர் கூறினார்.
 

click me!