இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்கிறது, அரசாங்கம் மக்களிடத்திலிருந்து எந்த தகவலையும் மறைக்கவில்லை என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்கிறது, அரசாங்கம் மக்களிடத்திலிருந்து எந்த தகவலையும் மறைக்கவில்லை என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்று வெற்றிகரமாக நடந்து வருவதை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் 75 க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஜம்முவுக்கான பாஜகவின் 'ஜன் சம்வத் பேரணி'யில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதலை தீர்க்க இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, சீனாவும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்படுத்த விரும்புகிறது. இந்ந விவகாரத்தில் யாரும் இருளில் தள்ளப்படமாட்டார்கள், சரியான நேரத்தில் சரியான தகவல்களை அரசு தெரிவிக்கும் என்றார்.
மேலும், நாட்டின் பாராளுமன்றமும் எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து நம்பிக்கை கொள்ளும் என கருதுகிறேன். எல்லை விவகாரத்தில் நாட்டின் இறையாண்மையில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம், இந்தியா முற்றிலும் பாதுகாப்பானது என தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஃபேல் விமானத்தின் முதல் தொகுதி ஜூலை மாதம் இந்தியாவுக்கு வரும் என தெரிவித்தார். ரஃபேல் விமானம் இந்தியாவின் பாதுகாப்புக்காக வாங்கப்படுகிறது, யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல என்றார். ராணுவத்தளவாடங்கள் இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், இனி தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை தொடங்க விரும்புகிறோம் என்றும் அவர் கூறினார். நாட்டில் முதல் முறையாக பாதுகாப்பு படைத்தலைவர் தலைமையிலான கூட்டம் நாட்டின் படைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது என அவர் கூறினார். சர்வதேச அளவில் பிரதமர் மோடி நாட்டின் கவுரவத்தை அதிகரித்துள்ளார்,
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் சர்வதேச அரங்கில் எழுப்பபட்டபோது பெரும்பாலான நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக நின்றனர், பிரதமர் மோடி உலக அளவில் இந்தியாவில் கௌரவத்தை அதிகரித்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகிறது. அதுமட்டுமின்றி மற்ற நாடுகளுடன் சேர்ந்து முஸ்லிம் நாடுகளின் ஆதரவையும் இப்போது நாம் பெறுகிறோம், இப்போது காஷ்மீர் மண்ணில் இந்தியாவின் கொடி மட்டுமே பறக்கிறது, ஆனால் முன்பு காஷ்மீரிய இயக்கங்கள் காஷ்மீர் சுதந்திரத்தை ஒரு பிரச்சினையாக மாற்றின, அந்த இயக்கங்கள் காஷ்மீர் கொடிகளுக்கு பதிலாக பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற கொடிகளை பறக்க விட்டனர், இப்போது காஷ்மீரில் இந்திய மூவர்ணக் கொடி மட்டுமே பறக்கிறது என்றார். எல்லைவிவகாரத்தில் இராணுவ மட்டத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன, இந்த பிரச்சினையை இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க சீனாவும் விரும்புகிறது என அவர் கூறினார்.