
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணு ஆயுதப் போரை தாம் தலையிட்டு நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். தாக்குதலை நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுடனும் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என வற்புறுத்தியாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய, "நாம் (அமெரிக்கா) ஒரு அணு ஆயுதப் போரை நிறுத்திவிட்டோம். அது ஒரு மோசமான அணுசக்தி யுத்தமாக இருந்திருக்கலாம். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அதைத் தடுத்து நிறுத்தியதைப் பற்றி நாம் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று கூறினார்.
கடந்த மே 10ஆம் தேதி, இந்தியா - பாகிஸ்தான இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக டொனால்டு டிரம்ப் தான் முதலில் அறிவித்தார். டிரம்ப்பின் அந்த அறிவிப்பு இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்கிறதா என்ற கேள்வியை எழுப்பியது.
இந்நிலையில் இப்போது மீண்டும் அணு ஆயுதப் போரை நிறுத்திவிட்டதாக டிரம்ப் கூறிருப்பது சர்ச்சையை மேலும் வலுவடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் தலையீடு குறித்து பிரதமர் மோடி தனது உரையில் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அதற்கு சிறிது நேரம் முன்பாக டொனால்டு டிரம்ப்பின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. மே 7ஆம் தேதி நள்ளிரவில் தொடங்கிய இந்த நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களைத் தாக்கியதாக இந்திய ராணுவம் அறிவித்தது.
இந்தியாவில் தாக்குதல்களுக்கு பதிலாக பாகிஸ்தானும் தாக்குதல் நடத்த முயன்றது. பெரும்பாலான முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்தது. மே 10ஆம் தேதி உருவான சண்டை நிறுத்தம் மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்துவந்த தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளன.