
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , கத்தார் நாட்டுக்குச் செல்லும்போது அந்நாட்டு அரச குடும்பத்தின் சார்பில் ஆடம்பர வசதிகள் கொண்ட போயிங் 747-8 ஜம்போ சொகுசு விமானம் பரிசாக வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
'பறக்கும் அரண்மனை' என்று அழைக்கப்படும் இந்த சொகுசு விமானம் பேசுபொருளாக மாறியுள்ளது. டிரம்ப்பின் மேற்கு ஆசிய சுற்றுப்பயணத்தில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் கத்தாருக்குச் செல்வார் என்று கூறப்படுகிறது.
கத்தார் பணத்தில் இந்தப் பரிசு டிரம்பிற்கு வழங்கப்பட்டால், ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த பரிசுகளில் ஒன்றாக இருக்கும். ஆனால், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
கத்தார் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு இடையே இந்த விவகாரம் குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று அமெரிக்காவுக்கான கத்தாரின் செய்தித்தொடர்பாளர் அலி அல்-அன்சாரி தெரிவித்துள்ளார்.
இந்த பரிசு அடுத்த வாரம் டிரம்பின் கத்தார் வருகையின் போது கத்தார் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் என்றும் ஏபிசி நியூஸ் குறிப்பிட்டுள்ளது. கத்தாரைச் சேர்ந்த ஒரு அதிகாரி, “இது டிரம்பிற்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் பரிசு அல்ல. இது அரசாங்களுக்கு இடையிலான ஒப்பந்தம்” என்று கூறியதாகவும் ஏபிசி நியூஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாம் பீச் விமான நிலையத்தில் டிரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள் போயிங் 747-8 விமானத்தை ஆய்வு செய்தனர். விமானத்தின் அம்சங்களால் டிரம்ப் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், விமானத்தின் ஆடம்பர அம்சங்களைப் பற்றி பெருமையாகப் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"பறக்கும் அரண்மனை" என்று குறிப்பிடப்படும் போயிங் 747-8 விமானம், ஒரு காலத்தில் கத்தார் அரச குடும்பத்தினராலும் பின்னர் துருக்கிய அரசாங்கத்தாலும் பயன்படுத்தப்பட்டது. இந்த ஜெட் விமானத்தில் படுக்கையறைகள், குளியலறைகள் உள்ளிட்ட ஆடம்பரமான வசதிகள் உள்ளன.
இப்போது, இந்த விமானம் 13 வருடம் பழமையானதாகும். இந்த ஜெட் விமானம் பரிசாக வழங்கப்பட்டால், அதனை அமெரிக்க விமான நிறுவனமான L3Harris, அதனை அமெரிக்காவின் ராணுவம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மாற்றியமைக்கும் பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிவடையும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஜெட் விமானம் முதலில் டிரம்பின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானமாகப் பயன்படுத்தப்படும் எனவும் எதிர்காலத்தில், அதிபரின் நூலகத்திற்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சுமார் 400 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்த சொகுசு ஜெட் விமானம் கடுமையான விமர்சனங்களையும் தூண்டியுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஆடம் ஷிஃப், “சராசரி அமெரிக்கர்களுக்கு விமானப் பயணச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், டொனால்டு டிரம்ப் அரை பில்லியன் டாலர் மதிப்புள்ள 'பறக்கும் அரண்மனை'யைப் பரிசாகப் பெறுகிறார். டிரம்பின் ஊழல் அவரை பணக்காரராக்குகிறது. நீங்கள் (மக்கள்) ஏழையாகிறீர்கள்.” என்று கூறியுள்ளார்.
டிரம்பை எதிர்க்கும் குடியரசுக் கட்சியினரின் எக்ஸ் பதிவிலும் இதுகுறித்த விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. "சில வாரங்களுக்கு முன்பு, டிரம்ப் குடும்பத்தின் நிறுவனம் கத்தாரில் ஒரு சொகுசு கோல்ஃப் ரிசார்ட்டைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதியளித்து ஆதரிக்கும் ஒரு மன்னராட்சி நாடு அமெரிக்க அதிபருக்கு 400 மில்லியன் டாலர் ஜெட் விமானத்தை வழங்கி, அவரது நிறுவனத்துடன் ஒப்பந்தங்களும் செய்கிறதா? அப்பட்டமான ஊழல்" என்று அந்தப் பதிவு கூறுகிறது.
ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து இவ்வளவு விலையுயர்ந்த பரிசை ஏற்றுக்கொள்வதற்கு அமெரிக்கச் சட்டத்தில் இடம் உள்ளதா என்ற விவாதத்தில் வலுத்துள்ளது. இது தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்புகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.