350% வரி விதிப்பதாக எச்சரித்தேன்.. இந்தியா - பாக் போரை நிறுத்தியதாக 60வது முறை கூறிய டிரம்ப்!

Published : Nov 20, 2025, 07:13 PM IST
Donald Trump/Saudi Crown Prince Mohammed bin Salman

சுருக்கம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் மூள்வதை தனது வரி விதிப்பு மிரட்டல் மூலம் தடுத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் உரிமை கோரியுள்ளார். டிரம்பின் இந்தக் கூற்றை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் மூள்வதைத் தான் தலையிட்டு, தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார். 60வது முறையாக இவ்வாறு பேசியுள்ளார். டிரம்பின் இந்தக் கருத்தை இந்தியா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் அவரது பேச்சை ஆமோதித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், மே 9 அன்று ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

டிரம்ப் விடுத்த வரி மிரட்டல்

இந்நிலையில், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கலந்துகொண்ட அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார். அப்போது, போர்களைத் தீர்த்து வைப்பதில் தான் ஒரு நிபுணர் எனக் குறிப்பிட்ட டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்தும் பேசினார்.

"இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன. 'நீங்கள் போருக்குச் செல்லலாம், ஆனால் நான் இரண்டு நாடுகளுக்கும் 350 சதவீத வரிகளை விதிப்பேன். உங்களுடன் அமெரிக்கா இனி எந்த வர்த்தகமும் செய்யாது' என்று நான் சொன்னேன்." என டிரம்ப் குறிப்பிட்டார்.

மேலும், "நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அணு ஆயுதத்தால் தாக்கி லட்சக்கணக்கான மக்களைக் கொன்று, அந்த அணு ஆயுதத் தூசு லாஸ் ஏஞ்சல்ஸ் மேல் படிய நான் அனுமதிக்கப்போவதில்லை என்று சொன்னேன். 350 சதவீத வரி விதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினேன்." என்றார்.

"எந்த அதிபரும் போர்களை நிறுத்த வரிகளைப் பயன்படுத்தியதில்லை. ஆனால், நான் நிறுத்திய 8 போர்களில் 5 போர்களை இதன் மூலமே நிறுத்தினேன்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இரு நாடுகளின் நிலைப்பாடு

இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த தானே காரணம் என டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில், இந்தக் கருத்தை பாகிஸ்தான் ஆமோதித்துள்ளது. ஆனால், இந்தியா தொடர்ந்து இந்த கூற்றை மறுத்து வருகிறது.

இந்தக் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், அமெரிக்காவில் இருந்து ரூ.822 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி
மோடி அழுத்தத்திற்கு அடிபணியும் தலைவர் அல்ல, இந்தியா வளர்ந்து வரும் சக்தி - புதின் புகழாரம்