Iran War: நான் நினைச்சா நிமிஷத்துல போரை நிறுத்துவேன்... ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்!

Published : Mar 11, 2026, 10:46 PM IST
Iran War: நான் நினைச்சா நிமிஷத்துல போரை நிறுத்துவேன்... ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்!

சுருக்கம்

ஈரான் உடனான போரை எப்போது வேண்டுமானாலும் தன்னால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைத்தால், கடுமையான ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் ஈரானை எச்சரித்துள்ளார்.

Iran-US War Day 12: ஈரான் உடனான போரை நினைத்தால் உடனடியாக நிறுத்த முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அதிரடியாகத் தெரிவித்துள்ளார். "நான் எப்போது விரும்புகிறேனோ, அப்போது இந்த போர் முடிவுக்கு வரும்," என்று அவர் கூறியுள்ளார்.

Axios செய்தி நிறுவனத்துக்கு போனில் அளித்த பேட்டியில், "ஈரானில் இப்போது தாக்குதல் நடத்த பெரிதாக இலக்குகள் எதுவும் மிச்சமில்லை. மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சில தாக்குதல்கள் தொடர்ந்தாலும், நான் நினைத்தால் இந்த போரை முடித்துவிடுவேன்," என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

தாக்குதல்கள் தொடரும் - இஸ்ரேல் அறிவிப்பு

டிரம்ப் இப்படி சொன்னாலும், மத்திய கிழக்கு பகுதியில் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்காவுடன் இணைந்து நடக்கும் இந்த தாக்குதல் நடவடிக்கை, தேவைப்படும் வரை தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

செய்திகளின்படி, "இந்த தாக்குதலுக்கு காலக்கெடு எதுவும் இல்லை. அனைத்து இலக்குகளும் எட்டப்பட்டு, இறுதி முடிவு கிடைக்கும் வரை இது தொடரும்," என்று கேட்ஸ் கூறியுள்ளார்.

தெஹ்ரான் உட்பட ஈரான் முழுவதும் தாக்குதல்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறுகையில், "தெஹ்ரான் மற்றும் ஈரானின் மற்ற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ராணுவ தளங்கள் குறிவைக்கப்படும்," என்றார்.

இந்த தாக்குதல்கள், அந்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து தலைவர் அலி காமெனியின் ஆட்சியை அகற்ற ஒரு வாய்ப்பை உருவாக்கும் என்றும், இறுதி முடிவு ஈரான் மக்களின் கையில்தான் உள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டிரம்பின் கடுமையான எச்சரிக்கை

ஒரு நாள் முன்புதான், CBS News தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "போர் கிட்டத்தட்ட முழுமையாக முடிந்துவிட்டது," என்று டிரம்ப் கூறியிருந்தார். "ஈரானிடம் இப்போது திறமையான கடற்படை, வலுவான தகவல் தொடர்பு அமைப்பு அல்லது விமானப்படை என எதுவும் இல்லை. அவர்களிடம் இருந்த ஏவுகணைகளும், ட்ரோன்களும் கூட அழிக்கப்பட்டுவிட்டன. ராணுவ ரீதியாக ஈரான் மிகவும் பலவீனமடைந்துவிட்டது," என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

'பெரிய தவறு செய்தால் ஈரான் என்ற நாடே இருக்காது'

அமெரிக்க அதிபர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசுகையில், "ஈரான் எந்தவொரு தவறான நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம். அப்படி ஏதேனும் பெரிய தவறு செய்தால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். அந்த நாட்டின் பெயரைக்கூட உலகம் மீண்டும் கேட்க முடியாத நிலை ஏற்படும்," என கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே வந்தால் ஆபத்து

செவ்வாய்க்கிழமை, உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஈரான் கண்ணிவெடிகளைப் பதிப்பதாக வரும் செய்திகள் குறித்தும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில், "ஹார்முஸ் ஜலசந்தியில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை ஈரான் உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால், இதுவரை கண்டிராத ராணுவ விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும்," என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!
Iran Ship Seizure: இந்தியா வந்த கப்பல் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு! ஈரான் அதிரடி..