நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பலவீனமான அல்லது செயலற்ற கிருமிகளைப் பயன்படுத்துவதன் மூலமே பொதுவாக தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியில் நல்ல செய்திகள் வரத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் தடுப்பூசி பரிசோதனையில் முன்னணியில் இருக்கும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மக்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்க செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அதன் ஆரம்ப சோதனையின் முடிவுகளை இன்னும் சில நாட்களில் அறிவிக்ககூடும் என தகவல் வெளியாகி உள்ளன. முன்னதாக செவ்வாயன்று, மாடர்னா இன்க் நிறுவனமும் அதன் இறுதி சோதனையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசி தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளது. பல தடுப்பூசிகள் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ஏற்கனவே கிட்டதட்ட அதன் இறுதி நிலையை அடைந்துவிட்டது எனவே அதன் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியது மட்டுமே பாக்கியாக உள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசியின் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்தும் சரியாக இருந்தால், இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
கொரோனா வைரஸுக்கான இந்த தடுப்பூசி ஆராய்ச்சியில் பேராசிரியர் சாரா கில்பர்ட் முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும் தடுப்பூசியின் மூன்றாவது மற்றும் இறுதிகட்ட ஆராய்ச்சியிலும் சாரா கில்பர்ட் முக்கிய பங்கு வகிக்கிறார். கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 80 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும் என்று கில்பர்ட் கூறியுள்ளார். இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்பதால், குளிர் காலத்தில் வைரஸின் பாதிப்பை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். கில்பர்ட்டின் குழு மற்ற தடுப்பூசி ஆராய்ச்சி குழுக்களை விட வேகமாக உள்ளது. பல தடுப்பூசிகள் அவற்றின் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் வேளையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 10,000 பேருக்கு அதன் கடைசி பரிசோதனையை முடிக்க உள்ளது. தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் கேட் பிங்காம் கூறுகையில், இந்த தடுப்பூசி உலக அளவில் முன்னணியில் உள்ளது என்றும், மற்ற தடுப்பூசிகளைவிட இது சிறப்பாக செயலாற்றக்கூடியவை என்றும் தெரிவித்துள்ளார்.
சாதாரண மருந்தை விட 50 சதவீதம் அதிக செயல்திறன் மிக்கதாக இருந்தால் மட்டுமே தடுப்பூசி அங்கீகரிக்கப்படும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறுகிறது. இது தவிர, இரத்த பரிசோதனையின்போதும் அதன் நோய் எதிர்ப்பு சக்தி நிரூபிக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது. நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பலவீனமான அல்லது செயலற்ற கிருமிகளைப் பயன்படுத்துவதன் மூலமே பொதுவாக தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே ஒரு தடுப்பூசியை தயாரிப்பது என்பது எளிதான காரியம் அல்ல, அதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஆனால் ஆக்ஸ்போர்டு குழு அதற்காக ஒரு சிறந்த நுட்பத்தை உருவாக்கியுள்ளது, இதில் பாதிப்பில்லாத வைரஸ்களைப் பயன்படுத்தி தடுப்பூசி ஆராய்ச்சியை வேகப்படுத்தியுள்ளது என ஆ,ராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கோவிட் -19 ஐப் பொறுத்தவரை, பேராசிரியர் கில்பர்ட் ஒரு சிம்பன்சியின் அடினோ வைரஸை எடுத்து, SARS-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதத்துடன் இணைத்து ஆராய்ந்துள்ளார் எனவும் அக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக எத்தனை தடுப்பூசிகள் வந்தாலும் அவை அனைத்தும் 100% செயல் திறன் கொண்தாக இருக்காது என சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார். எல்லா தடுப்பூசிகளும் வைரஸ் உற்பத்தியை தடுப்பது, அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது என 100% சதவீதம் செயல்படுவது இல்லை எனவும், அதே நேரத்தில் வைரஸை தடுப்பதற்கான நடுநிலை ஆன்டிபாடிகளை தடுப்பூசிகள் உருவாக்குகிறது எனவும் கூறியுள்ளார். சில தடுப்பூசிகள் தொற்று நோயை தடுக்காது ஆனால் நோயிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன என கில்பர்ட் கூறியுள்ளார். உதாரணமாக, போலியோ தடுப்பூசி தொற்று நோயை தடுக்காது ஆனால் மில்லியன் கணக்கான மக்களை நோயிலிருந்து பாதுகாக்கிறது எனக் கூறியுள்ளார்.