சீனா தனது ராணுவ வலிமையை காட்டி தன்னுடைய கொள்கைகளை சிறிய அண்டை நாடுகள் மீது திணிப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் இனி அமெரிக்கா எதிர்க்கும்.
தென்சீனக் கடல் பகுதியில் உள்ள வளங்கள் மீது சீனா உரிமை கொண்டாடி வருவது சர்வதேச விதிகளுக்கு முரணானது என்றும், சீனாவின் இந்த உரிமைகளையும், கோரிக்கைகளையும் முற்றிலும் நிராகரிப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, தென்சீனக்கடல் அனைத்தையும் சீனா தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது. தென்சீனக் கடலை தன் சாம்ராஜ்யமாக சீனா கருதுவதை உலகம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் தெரிவித்துள்ளார். தென்சீனக்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா சீனாவை எதிர்ப்பது இதுவே முதல்முறை இல்லை என்றாலும், தற்போது இரு நாட்டுக்கும் இடையேயான வார்த்தைப்போர் முன்பிருந்ததைவிட பன்மடங்காக ஆத்திர காத்திரமாக மாறியுள்ளது. இது இரு நாட்டுக்கும் இடையேயான பகை மேலும் அதிகரித்துள்ளதையே காட்டுவதாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்திற்கு பின்னர் அமெரிக்கா-சீனா இடையேயான உறவு எப்போது இல்லாத வகையில் விரிசலடைந்துள்ளது.
இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததையடுத்து இந்த பகை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தென்சீனக்கடல் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே நீருபூத்த நெருப்பாக இருந்த பகை மீண்டும் கெழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ளது. தென்சீனக்கடல் எல்லைக்கு அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளதுடன் அங்கு போர் ஒத்திகையிலும் ஈடுபட்டு வருகிறது. சீனாவும் அங்கு எந்த சூழலையும் எதிர்கொள்ள ஏவுகணைகளை தயாராக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தென்சீனக் கடல் பிராந்தியத்தில் சீனாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மோதல்கள், ஐநா ஆதரவு கொண்ட நடுவர் மன்றத்தின் மூலம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதே அமெரிக்காவின் கொள்கை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ட்ரம்ப்பின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, தென் சீன கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடும் பகுதிகள் அனைத்தும் விதிகளுக்கு முரணானது,
சீனாவின் அனைத்து விதமான உரிமைகளையும், கோரிக்கைகளையும் அமெரிக்கா நிராகரிக்கிறது. தென் சீன கடலில் சீனாவின் உரிமை கொண்டாடல்கள் அனைத்தும் விதிகளுக்கு முரணானது. தென் சீன கடல் பிராந்தியத்தை ஒட்டி சீனாவின் எல்லை உள்ளது, அதற்காக அந்த எல்லைக்கு வெளியே உள்ள கடல் பிராந்தியத்தை சீனா உரிமை கொண்டாடுவது தவறு. தென்சீனக் கடலை அதன் கடல் சாம்ராஜ்யமாக சீனா கருதுவதை இனியும் உலகம் அனுமதிக்காது. அமெரிக்கா தனது தென்கிழக்கு ஆசிய நட்பு நாடுகளுடனும், அவர்களின் இறையான்மை, வளங்களுக்கான மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக நிற்கிறது. சர்வதேச சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு இணங்க, கடல்களில் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை மதித்தல் ஆகியவற்றில் சர்வதேச சமூகத்துடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. தென் சீன கடலில் அதன் பரந்த பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ வலிமையை காட்டி தன்னுடைய கொள்கைகளை சிறிய அண்டை நாடுகள் மீது திணிப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் இனி அமெரிக்கா எதிர்க்கும்.
தென்சீனக் கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து நடுநிலை வகிக்கும், புரூனே, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உடன் இணைந்து செயல்படும் எனவும் அறிவித்துள்ளார். இது சீனாவுக்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கடல் எல்லைப் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்புகளை இனியும் அமெரிக்க அனுமதிக்காது, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நாங்கள் துணை எப்போதும் நிற்கிறோம், அந்நாடுகளுக்கு உதவியாக நாங்கள் எப்போதும் அங்கு நிற்கிறோம், சீனா சர்வதேச விதிமுறைகளை முறையாக மதிக்க வேண்டும். தென்சீனக் கடலில் சீனாவின் கோரிக்கைகள் எதையும் நாங்களோ, எங்கள் நட்பு நாடுகளோ ஏற்கமாட்டோம். இதையும் மீறி சீன ஆக்கிரமிக்க நினைத்தால் அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என பாம்பியோ எச்சரித்துள்ளார். தென் சீன கடல் பகுதியில் நீண்ட நாட்களாக அமெரிக்கா சீனா இடையே மோதல் இருந்து வரும் நிலையில், முதல் முறையாக அமெரிக்கா வெளிப்படையாக சீனாவை பகிரங்கமாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.