அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 73.8 சதவீதமாக பதிவாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியுள்ளது,
உலகம் முழுதும் கொரோனா கட்டுக்கடங்காமல் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இதன் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூபே மாகாணம், வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 180 க்கும் அதிகமான நாடுகளில் தனது கொடூர கரத்தை பரப்பி உள்ளது. இதில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு, சிலி, மெக்ஸிகோ, ஸ்பெயின், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகள் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் தீவிரமான முழு அடைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பொதுப் போக்குவரத்துக்கள் என அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அந்தந்த நாட்டு அரசுகள் மக்களை வலியுறுத்தி வருகின்றன.
இன்னும் ஒரு சில நாடுகள் கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது அபராதத் தொகையும் விதித்து வருகின்றன. இந்த அளவிற்கு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தாலும், நோய் தாக்கம் கொஞ்சமும் குறையவில்லை. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 1 கோடியே 32 லட்சத்து 40 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது. இதில் 77 லட்சத்து 7 ஆயிரத்து 191 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் 49 லட்சத்து 57 ஆயிரத்து 923 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உலகளவில் சுமார் 59 ஆயிரத்து 195 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் உள்ள மக்கள் தொகையில் பத்து லட்சம் பேருக்கு 1,599 பேர் என்ற விகிதத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 73.8 சதவீதமாக பதிவாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியுள்ளது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5 லட்சத்து 75 ஆயிரத்து 525 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸால் அமெரிக்காவே மிக அதிகமான பாதித்துள்ளது. அங்கு மட்டும் 34,79,483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,38,247 ஆக உயர்ந்துள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நோய்த்தொற்று அளவீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.