உக்ரைன் அதிபரை கொல்ல.. 400 பேரை அனுப்பிய ரஷிய அதிபர் புடின்.. வெளியான 'அதிர்ச்சி' தகவல் !!

By Raghupati R  |  First Published Mar 1, 2022, 1:09 PM IST

உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷியா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷிய தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. போர் பீதியால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐநா சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. 

போர் தீவிரமடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறுவோர், போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும்  மால்டோவா ஆகிய நாடுகளில் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக போலந்து நாட்டு எல்லையில்  2,81,000,பேர் குவிந்துள்ளனர். கீவ் மற்றும் 2-வது பெரிய நகரமான கார்கீவ் ஆகியவற்றில் கடும் தாக்குதல்களை தொடுத்தது. 

Tap to resize

Latest Videos

அங்கு ஏவுகணை மற்றும் குண்டு மழைகள் பொழிந்தன. குறிப்பாக தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் தீவிரமாக உள்ளனர். அந்நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய படை தெருக்களில் சண்டையிட்டது. அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினரும் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வடக்கே ரஷிய படைகள் வரும் செயற்கைகோள் படம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷிய ராணுவத்தின் அணி வகுப்பு உள்ளது. ராணுவ வாகனங்கள், பீரங்கிகள், தளவாடங்கள் ஆகியவற்றுடன் ரஷிய வீரர்கள் 64 கிலோ மீட்டருக்கு அணிவகுத்து தலைநகரை நோக்கி செல்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் சில வீடுகள், கட்டிடங்கள் எரிந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.

ஏற்கனவே நேற்று கீவ் நகர் மையப்பகுதியில் இருந்து ரஷிய படைகள் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. கீவ்வை நோக்கி பெரும் ஆயுதங்களுடன் ரஷியபடை முன்னேறி வருவதால் அங்கு பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. நேற்று உக்ரைன் - ரஷியா இடையே பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை தொடங்கியதை அடுத்து ரஷியாவின் தாக்குதல் தீவிரம் குறைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தான் தலைநகர் கீவ்வை நோக்கி வடக்கு பகுதியில் இருந்து ரஷிய படைகள் வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷியா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

ரஷியாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளது.  இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வாக்னர் குழுமத்தில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூலிப்படையினராக உள்ளனர். இந்த அமைப்பு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜினால் நடத்தப்படுகிறது.

இந்த கூலிப்படையை சேர்ந்த 400 பேர் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த கூலிப்படையினருக்கு உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்க்கியை தேடி கண்டுபிடித்து கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்தான் தனது கூட்டாளியான கூலிப்படை அமைப்புக்கு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!