அமெரிக்காவில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், 5 பேர் காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு - 10 பேர் பலி
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் டாப்ஸ் சூப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அமெரிக்க மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இனவெறியின் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் மீண்டும் அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேவாலயத்தில் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி
சூப்பர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று 24 மணி நேரம் முடிவதற்குள் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் அமெரிக்க மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பொதுமக்கள் வழிபாடு நடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது தேவாலயத்திற்கு வந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென அங்கிருந்த மக்களை பார்த்து சுட ஆரம்பித்தார். இதில் தேவாலயத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் மர்ம மனிதரிடம் பேச்சு வார்த்தை நடத்தி துப்பாக்கியை கீழே போட வைத்தனர். இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழிபாட்டு தலத்திற்கு செல்ல மக்கள் அச்சம்
இந்த சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் வழிபாட்டு தலத்திற்கு செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோமின் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், வழிபாட்டு தலத்திற்கு செல்ல பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.