விளாடிமிர் புதின் இப்படித் தான் இருக்கிறார்...விரைவில் மாற்றம் வரும்.. பகீர் கிளப்பிய உக்ரைன் ராணுவ ஜெனரல்..!

By Kevin KaarkiFirst Published May 15, 2022, 12:17 PM IST
Highlights

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. 

சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுத்து இருப்பதாக ரஷ்யா பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி உக்ரைன் மீது பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என கூறிய போதும், ரஷ்ய செயல்கள் வெளிப்படையாகவே போர் போன்று தான் உலக நாடுகளுக்கு தெரிகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. 

பல நாடுகள் இரு நாடுகள் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு கடும் கண்டனம், எதிர்ப்புகளை தெரிவித்து பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இன்றைய தேதியில் பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு சிறப்பு தடை உத்தரவுகளை போட்டுள்ளன. உக்ரைன் நகரங்களை ரஷ்யா நாளுக்கு நாள் மிக ஆக்ரோஷமாக தாக்கி அழித்து வருகிறது. உக்ரைன் சார்பில் ரஷ்ய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

புதின் பதவிக்கு ஆபத்து:

போர் காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா என இரு நாடுகளுக்கும் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் பல்லாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், நடைபெற்று வரும் போர் குறித்து உக்ரைன் ராணுவத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர், ரஷ்யாவில் விரைவில் அதிபர் விளாடிமிர் புதின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றும் இதற்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ராணுவ மேஜர் ஜெனரல் கிர்யிலோ புடனோவ், போர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத மத்தியில் திசை திரும்பும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் போர் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்து உள்ளார். 

உடல் நலம் பாதிப்பு:

“ரஷ்ய பெடரேஷன் தலைமையில் மாற்றம் நடைபெற இது வழி வகுக்கும். இதற்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே தொடங்கி முதல் பாதி நிறைவு பெற்று விட்டது. இதனை சாத்தியப்படுத்தும் நடைமுறை சீராக நடைபெற்று வருகிறது. இனி இதை நிறுத்தவே முடியாது,” என ராணுவ ஜெனரல் கிர்யிலோ புடனோவ் தெரிவித்து இருக்கிறார். 

“அதிபர் புதினின் மனநலம் மற்றும் உடல் நலம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது, அவரின் உடல்நிலை மோசம் அடைந்து விட்டது,” என அவர் மேலும் தெரிவித்தார். போர் காரணமாக பொய் தகவல்களை தெரிவிப்பதாக வெளியாகும் கருத்துக்களை உக்ரைன் ராணுவ ஜெனரல் மறுத்து இருக்கிறார். 

பொது வெளியில் விளாடிமிர் புதின் :

அதிபர் விளாடிமிர் புதின் உடல்நலம் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இது குறித்து இணையத்தில் வெளியாகும் பல்வேறு வீடியோக்களில் அதிபர் புதின் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை வரவேற்கும் போது மிக நடுக்கமாக காணப்படுகிறார் என என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவருக்கு பார்கின்சன் நோய் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளியாகி வரும் தகவல்களுக்கு ரஷ்யா சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மேலும் அதிபர் விளாடிமிர் புதின் பொது வெளியில் வரும் விவகாரங்களில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவர் இப்போதும் ஆரோக்கியமாகவும், நல்ல உடல்நலனுடன் இருப்பதை வெளிப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

click me!