பிரிட்டன் மக்களை ஈவுஇரக்கமின்றி தாக்கும் புதிய கொரோனா.ஒரே நாளில் 33 ஆயிரம் பேருக்கு தொற்று. கதறும் விஞ்ஞானிகள்

By Ezhilarasan BabuFirst Published Dec 22, 2020, 2:23 PM IST
Highlights

கிறிஸ்மஸ் பண்டிகையை ரத்து செய்துவிட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இதன்காரணமாக  ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தி உள்ளன.

பிரிட்டனில் வளர்ச்சிதை மாற்றம் அடைந்து புதிய உருவமெடுத்துள்ள வைரஸ் அந்நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் அங்கு 33 ஆயிரத்து 364 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது இங்கிலாந்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை உலக அளவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயிலிருந்து மீண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது. உலக அளவில் 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் பிரிட்டன் 6வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் பிரிட்டனில் திடீரென கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து, அந்நாட்டு மக்களை வேகமாக தாக்கிவருவது உலகையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. புதிய உருவமெடுத்துள்ள இந்த வைரஸ் ஏற்கனவே இருந்த வைரஸை காட்டிலும் விட 70சதவீதம் வேகமாக பரவக்கூடியது என்பதால் இதில் மிகக் கொடூரமான வைரஸாக கருதப்படுகிறது. இந்த வைரஸ் தொற்கு இங்கிலாந்து பகுதியில் வேகமாக பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இது கடந்த நவம்பர் மாதம் பிறழ்வு பெற்றதாகவும், இது தற்போது மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது எனவும் கடந்த செப்டம்பரில் இது ஒரு நோயாளிக்கு தென்பட்டது எனவும் இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே நாட்டில் பரவி வரும் வைரஸை கட்டுப்படுத்த பைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி அதை மக்களுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், வைரஸ் புதிதாக  உருமாற்றம் அடைந்திருப்பது ஒட்டுமொத்த விஞ்ஞானிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி எந்த அளவுக்கு இந்த வைரசுக்கு எதிராக செயல்படும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என ரீடிங் பல்கலைக்கழகத்தின் செல்லுலார் நுண்ணுயிரியல் இணை பேராசிரியர் சைமன் கிளார்க் கூறியுள்ளார். தடுப்பூசி முழுமையாக கிடைக்கும் வரை புதிய கட்டுப்பாடுகள் இங்கிலாந்தின் மூன்றில் ஒரு பங்கு அமலில் இருக்கக்கூடும் என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலாளர் ஹான்காக் கூறியுள்ளார். 

 

இதன்காரணமாக தென்கிழக்கு இங்கிலாந்தில் ஊரடங்கு இன்னும் பல மாதங்களுக்கு நீட்டிக்க படலாம் எனவும், எனவே கிறிஸ்மஸ் பண்டிகையை ரத்து செய்துவிட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இதன்காரணமாக  ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தி உள்ளன. சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்திற்கு அடுத்த ஒரு வாரத்திற்கு தடைவிதித்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 33 ஆயிரத்து 364 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்து 73 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அங்கு 215 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 616 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!