அதே டிசம்பர்... பரவும் வீரியமான புதிய வகை கொரோனா... மீண்டும் பாடாய்ப்படுத்தப் போகிறதா..?

By Thiraviaraj RMFirst Published Dec 22, 2020, 2:05 PM IST
Highlights

பிரிட்டனில் ஏ117 என்று சொல்லக்கூடிய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ், அங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டுள்ளது. 

சீனாவின் வூகான் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டு ஆன நிலையில், தற்போதுதான் அதன் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட  நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இங்கிலாந்தில் பரிணாம மாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறிப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய வைரஸ் தற்போதுள்ள வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவக் கூடியது என கூறப்படுகிறது. இதனால், இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை அடுத்து இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, உள்ளிட்ட பல நாடுகள் இங்கிலாந்து உடனான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இந்தநிலையில், இங்கிலாந்தில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது சளி மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி அமலுக்கு வந்ததால் கொரோனா பீதி சற்று தணிந்திருந்த நிலையில், பரிணாம மாற்றம் கொண்ட புதிய வகை வைரஸ் மீண்டும் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்த நிலையில் இந்த ஆண்டும் டிசம்பர் மாதம் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் குகானந்தம் கூறுகையில், ‘’பிரிட்டனில் ஏ117 என்று சொல்லக்கூடிய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ், அங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டுள்ளது. அது குளிர்காலம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்தத் தொற்று பாதிக்கப்பட்டவர் மூலம் மட்டுமே நம் நாட்டில் பரவமுடியும்.

முதலில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது இருந்த சிறுசிறு பிழைகளும் தற்போது சரிசெய்யப்பட்டு விமான நிலையங்களிலேயே தீவிரப் பரிசோதனை செய்யப்படுவதுடன் பயணிகளை கண்காணிக்கும் வழிமுறைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்த நோய்க்கிருமி நமது நாட்டில் அதிகளவில் பரவ வாய்ப்பில்லை. அப்படி பரவினாலும் வீரியம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. இப்போதும் பாதிக்கப்பட்ட நபரின் மாதிரியை புனேவுக்கு சோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். சோதனை முடிவில்தான் அதுபற்றி தெரியவரும்.

ஒருவேளை வைரஸ் வேகமாக பரவினாலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது இனிமேல்தான் தெரியவரும். ஏனென்றால், புதிய மற்றும் பழைய வகை கொரோனாக்களில் புரத்தத்தின் தன்மையானது ஒரே மாதிரி இருப்பதால், உருமாறிய புதிய கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது’’ எனக்கூறி ஆறுதல் அளித்துள்ளார். 

click me!