அபாய கட்டத்தைக் தாண்டிய உலக சராசரி வெப்பநிலை: அதிர்ச்சி தகவல்!

By Manikanda Prabu  |  First Published Jul 5, 2023, 2:07 PM IST

உலக சராசரி வெப்பநிலை அபாய கட்டத்தைக் கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


உலகின் சராசரி வெப்பநிலை கடந்த ஜூலை 3ஆம் தேதி 17.01 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரித்துள்ளது. அந்த நாள் உலகின் மிக அதிக வெப்பம் பதிவான நாளாக பதிவாகியுள்ளது.

உலகில் அதிக வெப்பம் நிலவும் பகுதிகள், அதிக குளிர்நிலவும் பகுதிகள் ஆகியவற்றில் ஒவ்வொரு நாளும் பதிவாகும் வெப்பநிலையின் சராசரி அளவே, உலக சராசரி வெப்பநிலை எனப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியசாக  பதிவாகியிருந்தது. அது தான் உலகின் மிக அதிக வெப்பம் பதிவான நாளாக பதிவாகியிருந்தது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், அதனை கடந்து ஜூலை 3ஆம் தேதி 17.01 டிகிரி செல்சியஸ் உலகின் சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது, 62.62 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், உறைபனி பகுதியான அண்டார்டிகாவிலும் வெப்பநிலை அதிகரித்து வருவதாக அமெரிக்க சுற்றுச்சூழல் கணிப்பு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக சராசரி வெப்பநிலை அபாய கட்டத்தைக் கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பூவுலகை அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என பாமக தலைவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தொழிற்புரட்சி காலத்திற்கு முன் 14 டிகிரி செல்சியஸாக இருந்த புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாக மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், அதை 2 டிகிரி செல்சியஸ், அதாவது 16 டிகிரி என்ற அளவுக்கு செல்லவிடாமல் குறைக்கவும், முடிந்தால் இதை 1.5 டிகிரி செல்சியசுக்குள், அதாவது 15.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முயற்சி செய்வது என்றும் கடந்த 2015ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த 21-ஆம் ஐ.நா. காலநிலை மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. 

குழந்தைகளை கைவிட்ட பெற்றோர்: சிங்கப்பூர் அரசு அதிரடி சட்டம்!

ஆனால், உலகின் சராசரி வெப்பநிலை கட்டுப்படுத்த வேண்டிய இலக்கான 16 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கைக் கடந்து 17.01 டிகிரி செல்சியசாக அதிகரித்திருக்கிறது. இனிவரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்றும், வெப்பமயமாதலுக்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் மிக மோசமான விளைவுகளை உலகம் எதிர்கொள்ளும் என்றும் காலநிலை வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூமியிலிருந்து கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படும் அளவை 2010ஆம் ஆண்டில் இருந்ததை விட 2030ஆம் ஆண்டுக்குள் 45 விழுக்காடு குறைக்க வேண்டும். பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படும் அளவையும், அவை அகற்றப்படும் அளவையும் 2050ஆம் ஆண்டுக்குள் சமமாக ஆக்க வேண்டும் (Net Zero) என்பதுதான் கிளாஸ்கோ நகரில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற 26-வது ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில்  தீர்மானத்தின் அடிப்படையாக இருந்தது. ஆனால், இந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

நிலக்கரி, பெட்ரோலியப் பயன்பாட்டை குறைத்தல், அனைவருக்கு தூய ஆற்றல் கிடைக்கச் செய்தல், நகரமயமாக்கலை மாற்றியமைத்தல், வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துதல், கட்டடங்கள் அமைக்கும் முறையில் மாற்றம், போக்குவரத்தில் மாற்றம், தொழிற்சாலைகளை தூயமுறைக்கு மாற்றுதல், நிலப்பயன்பாட்டில் மாற்றம் ஆகியவற்றை உடனடியாக செய்தால் மட்டும் தான் பேரழிவை கட்டுப்படுத்த முடியும். ஆனால், இவற்றை செய்வதற்கான அரசியல் மற்றும் பொருளாதார துணிச்சல் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இல்லை என்பது தான் வேதனையாகும்.

புவிவெப்பமயமாதலுக்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்,  புவிவெப்பமயமாதல் காரணமாக நாம் எதிர்கொண்டு வரும் பெரும் வறட்சி, பெரும் வெள்ளம், அனல் காற்று, அதிவேக புயல், தண்ணீர் தட்டுப்பாடு, பொருளாதார பாதிப்பு, புதிய புதிய நோய்கள் ஆகியவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். இந்த ஆபத்தை உணர்ந்து புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் விரைவுபடுத்த வேண்டும்; அன்னை பூமியை காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!