
பட்டம் பறக்கவிடப் பயன்படும் கண்ணாடி, இரும்பு கலந்த மாஞ்சா நூல், நைலானால் செய்யப்பட்ட மாஞ்சா நூல் ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும் நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் இந்த உத்தரவைப் பிறப்பித்து, அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக மாஞ்சா நூல் விற்பனை, தயாரிப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்டார்.
பட்டம் பறக்கவிடப் பயன்படும் மஞ்சா நூலில், சிக்கி இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், பைக்கில் செல்பவர்கள் பலர் கழுத்து அறுபட்டு ஆண்டுதோறும் பலியாகி வருவது தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு 4 பேர் சென்னையில் பலியானார்கள். வடசென்னையில் மாஞ்சா நூல் தயாரிப்பும், பயன்பாடும் அதிகமாகும்.
மாஞ்சா நூலை பயன்படுத்தவும், தயாரிக்கவும் சென்னை மாநகர காவல் ஆணையர் தடை விதித்துள்ளார். மீறி பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை கிடைக்கும் என உத்தரவிடும் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மாஞ்சா நூல் தயாரிப்பை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் கோபிகா தொடர்ந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ‘மாஞ்சா நூல் விற்கும்போது அதைப் பறிமுதல் செய்வதைவிட, மாஞ்சா நூல் தயாரிப்பைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நீதிபதி உத்தரவில் கூறப்பட்டிருந்தது. மாஞ்சா நூலில் சிக்கி ஆண்டுதோளும் 100-க்கும் மேற்பட்ட பறவைகளும், மனிதர்கள் பலரும் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், விலங்குகள் நல அமைப்பான “பீட்டா” மாஞ்சா நூலை தடைசெய்யக்கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
அந்த மனுவில் “ மாஞ்சா நூல் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளின் உயிருக்கும் கேடுவிளைவிக்க கூடியது. இதனால், இதற்கு முன் பல உயிரிழப்புகள் நடந்துள்ளன.
மாஞ்சா நூல் உடைந்த கண்ணாடி துண்டுகள், உலோகம், கூர்மையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் மனிதர்கள் கழுத்தில் பட்டவுடன் உயிரிழப்பை உண்டாக்கும்.
மேலும், மின்கம்பியில் மாஞ்சா நூல் பட்டாலும், அதைத் தொடரும் மனிதர்களும், விலங்குகளும் பாதிக்கப்படுவார்கள், மேலும், மாஞ்சா நூல் தயாரிப்பில் குழந்தைகளும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆதலால், இதற்கு ஒட்டுமொத்த தடை விதிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் பிறப்பித்த உத்தரவில், “ பட்டம் விடப் பயன்படும் மாஞ்சா நூல், நைலான் நூல், சீனா நூல், மாஞ்சா சேர்க்கப்பட்ட பருத்தி கயிறு என அனைத்தின் பயன்பாட்டுக்கும் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் இந்த உத்தரவை அமல்படுத்தி, மாஞ்சா நூல் தயாரிப்பு, விற்பனை, மூலப்பொருட்கள் கொள்முதல், மாஞ்சா மூலம் பறக்கவிடப்படும் பட்டம் ஆகியவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.