கொரோனா உள்ளே நுழைய முடியாத 15 நாடுகள்... விரட்டியடித்து உலகத்திற்கு கற்றுக்கொடுத்த பாடம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 20, 2020, 5:56 PM IST
Highlights

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகள் நடுக்கத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி அலறி வருகின்றன. ஆனால், சில நாடுகளை மட்டும் கொரோனாவால் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. 
 


உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகள் நடுக்கத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி அலறி வருகின்றன. ஆனால், சில நாடுகளை மட்டும் கொரோனாவால் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. 

உலகில் உள்ள 195 நாடுகளில் பெரும்பாலானவை கொரோனாவின் கொடூரத்தை உணர்ந்துள்ளன. இந்த சூழலில், கொரோனாவின் கால்தடம் பதிக்காத 15 நாடுகள் உள்ளன. இதன்படி, ஆசிய கண்டத்தில் வடகொரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் கொரோனா தாக்கம் இல்லை. ஆப்பிரிக்க கண்டத்தில் லெசோத்தோ, காமரோஸ் நாடுகளில் கொரோனா பரவல் இல்லை. ஓசியானா எனப்படும் பெருங்கடல் பகுதியில் உள்ள 8 தீவுகளில் யாருக்கும் கொரோனா பரவவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதேபோல, மக்களின் நிரந்தர குடியேற்றம் இல்லாத அண்டார்டிகாவிலும் கொரோனா இல்லை. ஏன் இந்த நாடுகளை கொரோனா சீண்டவில்லை? இரண்டரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட வடகொரியாவின் அண்டை நாடாக இருக்கிறது சீனா. பொதுவாகவே உலக நாடுகளிலிருந்து தனித்திருக்கும் வடகொரியா, கடந்த ஜனவரியிலேயே சீன எல்லையை மூடியது. வெளிநாட்டினரின் வருகைக்கு தடைவிதித்தது.

இருப்பினும், அரசு ரகசியமாக செயல்படுவது, மோசமான சுகாதார கட்டமைப்பு, போதுமான அளவில் பரிசோதனை திறன் இல்லாதது ஆகிய காரணங்களால் வடகொரிய அரசின் தகவல்களை முழுமையாக நம்ப இலயவில்லை. துருக்மெனிஸ்தான் அரசு, மார்ச் மாதத் தொடக்கத்திலேயே எல்லைப் பகுதிகளை மூடியது. சீனாவுக்கு செல்லும் விமானங்களை பிப்ரவரி தொடக்கத்திலேயே ரத்துசெய்தது. துருக்மெனிஸ்தான் சுகாதாரத் துறையின் தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்தது இல்லை எனவும் கூறப்படுகிறது. 

தஜிகிஸ்தான் பகுதியில் பல்வேறு சந்தேக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இவை நிமோனியாவால் ஏற்பட்டவை என்று அரசு அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள லெசோத்தோ, காமரோஸ் நாடுகளிலும் கொரோனா பதிவாகவில்லை. ஆயினும், அண்டை நாடுகளில் நோய் பரவல் உள்ள நிலையில், உரிய சோதனை முறைகள் இல்லாததால் நோய் கண்டறியப்படாமல் இருந்திருக்கலாம். அதாவது கொரோனா தொற்று இருந்தும் அது அந்த நோய் தானா என கண்டறியாமல் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பெருங்கடல் தீவான சாலமனில் 6 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அந்தத் தீவில் மார்ச் 25-ம் தேதி பொது அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. டோங்கா, வனவட்டு தீவுகள், மார்ச் மாதம் முதலே கொரோனா அதிக பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வான்வழி மற்றும் கடல்வழியாக மக்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, சமோவா, பாலாவ், துவாலு, நவ்ரு, கிரிபதி, மார்ஷல், மிக்ரோனேசியா ஆகிய தீவுகளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தடைவிதித்ததால் வைரஸ் பரவல் இல்லாத நிலையை எட்டியுள்ளன.

இந்தியாவிலும், சிக்கிம், தாத்ரா-நாகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தாக்கம் அறவே இல்லை. இந்தியாவின் பல பகுதிகளிலும் வெளிநாட்டு பயணிகளை உள்ளே நுழைய விடாமல் ஆரம்ப காலகட்டத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது அவதிப்பட்டிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது எனக் கூறப்படுகிறது. 

click me!