பயங்கர அதிர்ச்சி.. மூன்றாவது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம்.. கதறும் பிரேசில்.

By Ezhilarasan BabuFirst Published Feb 15, 2021, 12:55 PM IST
Highlights

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனாஸ் பகுதியில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த மரபணு மாற்றத்தால், அந்நாட்டில் மூன்றாவது அலை தாக்கும் ஆபத்து எழுந்துள்ளது.  

இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து தற்போது பிரேசிலிலும் மூன்றாவது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்துள்ளதாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேசிலில் மனாஸ் பகுதியில் இதன் தாக்கம் தீவிரமாக இருந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளிகரம் செய்துள்ளது. இதுவரை 180-க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள் இந்த வைரஸை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி  தங்கள் நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுத்தன. ஆனால் பிரேசில் அதிபர் பொல்சனரோவோ வைரஸை பெரிதாக பொருட்படுத்தவில்லை, கொரோனா வைரஸ் என்பதே ஒரு மாயை எனவு பகிரங்கமாக கருத்துக் கூறினார். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதில்  கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தனர். 

அதாவது உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது, இதுவரை அங்கு 9, 834, 613 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 39 ஆயிரத்து 794 பேர் இதுவரை அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் பிரேசில் உள்ளது.  சாவோ பாலோ பகுதியில் இந்த உயிரிழப்பு பெருமளவில் நிகழ்ந்தது, அந்நாட்டில் சடலங்களை புதைப்பதற்கு கூட சவப்பெட்டிகள் கிடைக்காத சூழல் உருவானது. அந்த அளவிற்கு கொரோனா தாக்கத்தை கடுமையாக எதிர்கொண்ட பிரேசிலில் தற்பொழுது மூன்றாவது  பிறழ்வு ஏற்பட்டுள்ளது அந்நாட்டின் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இதற்கு  முன்னர் பிரிட்டனில் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்தது, அது சாதாரண  வைரஸை காட்டிலும் 70 மடங்கு தீவிரமாக பரவக் கூடியதாக இருந்தது. அதேபோல் தென்னாப்பிரிக்காவிலும் கொரோனா உருமாற்றம் அடைந்தது, இந்த இரண்டு பிறழ்வுகளும் ஒட்டுமொத்த உலகத்தையும் ஏற்கனவே அச்சத்தில் ஆற்றியுள்ள நிலையில், தற்போது பிரேசிலில்  கொரோனா வைரஸ் மரபணுமாற்றம் அடைந்திருப்பது விஞ்ஞானிகள் மத்தியில் கவலையை அதிகரிக்க செய்துள்ளது. 

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனாஸ் பகுதியில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த மரபணு மாற்றத்தால், அந்நாட்டில் மூன்றாவது அலை தாக்கும் ஆபத்து எழுந்துள்ளது. இதுவரை இங்கிலாந்தில் உருமாறிய வைரஸ் 50 நாடுகளுக்கும், தென்னாப்பிரிக்காவின் உருமாறிய வைரஸ் 30 நாடுகளுக்கும் பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக வைரஸ் உருமாற்றம் அடைவது புதிதல்ல என்றாலும், அது மிக தீவிரமிக்கதாக தாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே பிரேசில் உடனே முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டுமென அந்நாட்டின் சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு நாடுகள் பிரேசிலை எச்சரித்துள்ளன. உலக சுகாதார நிறுவனம் வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பிரேசில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஒரு வேளை ஊரடங்கு அறிவிக்கப்படாவிட்டால் சுமார் 210 மில்லியன் மக்கள் தொகை கொண்ட  பிரேசிலில் வசிக்கக்கூடிய 90% மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகக் கூடிய நிலை ஏற்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் கொரோனா வைரஸ் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து  மனாஸ்ஸை தனிமைப்படுத்த வேண்டும் என்றும்  சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மனாசில் இந்த வைரஸ் அதிகரிப்பதற்கு காரணம் அதிக அளவில் பார்கள் மற்றும் உணவகங்கள் செயல்படுவதே என கூறப்படுகிறது. அதேபோல் அந்நாட்டிலுள்ள வலதுசாரி சித்தாந்தம் கொண்ட அதிபரான பொல்சனரோவின் மொத்தனபோக்கும், அவரின் பொறுப்பற்ற செயல்களுமே கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது. தற்போது இரண்டாவது  அலையை அந்நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், பிரேசில் விஞ்ஞானிகள் தங்களது கைகளை கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள் எனவும் அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.  

 

click me!