Singapore Thaipusam : சிங்கப்பூரில் வாழும் ஏராளமான தமிழர்கள், கொரோனா பரவல் முடிந்து 2 ஆண்டுகளுக்குப்பின் தைத்பூசத் திருநாளை நேற்று கோலாகலமாக, உற்சாகமாகக் கொண்டாடினர்.
Singapore Thaipusam : சிங்கப்பூரில் வாழும் ஏராளமான தமிழர்கள், கொரோனா பரவல் முடிந்து 2 ஆண்டுகளுக்குப்பின் தைத்பூசத் திருநாளை நேற்று கோலாகலமாக, உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஏராளமான தமிழர்கள் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்ட காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், முகத்தில், நாக்கில், உடலில் வேல் குத்தியும் தங்கள் நேர்த்திக் கடனை தமிழ்க்கடவுள் முருகனுக்கு நேற்று செலுத்தினார்கள்.
சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நேற்று நடந்த தைப்பூச நிகழ்ச்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்பக்தர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சர் தான் சீ லெங்கும் பங்கேற்று வழிபாடு செய்தார்.
மனிதவளத்துறை அமைச்சர் தான் சீ லெங் கூறுகையில் “ கொரோனா காலத்துக்குப்பின் மக்களுக்கு இயல்புவாழ்க்கை இப்போதுதான் வந்துள்ளது. கொரோனாவை வெற்றிகரமாக கடந்தது எங்கள் தேசத்துக்கும், மக்களுக்கும் கிடைத்தவெற்றி” எனத் தெரிவித்தார்
சிங்கப்பூரில் வெளியாகும் “தி ஸ்ட்ரைட் டைம்ஸ்” நாளேடு வெளியிட்ட செய்தியில் “ பன்முகக் கலாச்சாரங்கள், மதங்கள், அனைத்தும் சங்கமிக்கும் விழாவா தைப்பூசம் இருக்கிறது. இங்கு அனைத்து மதங்களுக்கும், கலாச்சாரத்துக்கும் மதிப்பளிப்பது பெருமைக்குரியது” எனத் தெரிவித்துள்ளது.
மனித வளத்துறை அமைச்சர் தான் சீ லெங், சீனவாசப் பெருமாள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து தமிழ்பக்தர்களுடன் உரையாடினார்.
அமெரிக்க வான்வெளிக்குள் சீனா-வின் ராட்சத உளவு பலூன்: பென்டகன் எச்சரிக்கை
சிங்கப்பூரில் உள்ள பாலதண்டாயுதபானி கோயிலுக்கு ஏாளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இந்த இரு கோயில்களும் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.
51வயதான திருநாவுக்கரசு சுந்தரம் பிள்ளை என்பவர் சர்க்கர நாற்காலியில் அமர்ந்தவாறு 30 கிலோ வேல்அலகு குதித்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தியது பக்தர்களை பரவசப்படுத்தியது.
இது தவிர புத்த-இந்து ஜோடியான பிசாமான் ரிச்மான்ட், அவரின் கணவர் ரேமாண்ட் ரிச்மாண்ட் ஆகியோரும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 73வயதாகும் பிசாமோர்னுக்கு கடந்த 2020ம் ஆண்டில் பக்கவாதம் ஏற்பட்டது. இருப்பினும் சர்க்கர நாற்காலியில் வந்துநேர்த்திக்கடன் செலுத்தினார்.
சிங்கப்பூர் தைப்பூசத் திருநாளான நேற்று வேறுநாடாக இல்லாமல் தமிழகத்தின் ஆன்மீகத்தலம் போல் காட்சியளித்தது. ஹேஸ்டிங் சாலை, ஷார்ட் சாலை, காதே க்ரீன் சாலையில் ஏராளமான தமிழர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் மேளம், மிருதங்கம், உருமி,நாதஸ்வரம், தவில் இசைத்தும் ஆடிப்பாடியும் உற்சாக ஊர்வலம் வந்தனர்.
ஏறக்குறைய 13 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். சனிக்கிழமை இரவு 11.30மணிக்குத் தொடங்கிய தைப்பூசத் திருநாள், நேற்று இரவுவரை தொடர்ந்தது. இந்து அறநிலையத்துறை சார்பில் முருகன் கோயிலில் நடந்தநிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.