கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
தீவிரவாதக் குழுக்கள் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணத்தின் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் கொல்லப்பட்டதாக மாகாண தகவல் இயக்குனர் நஜிபுல்லா ஹசன் அப்தால் தெரிவித்துள்ளார்.
undefined
மேலும் பாகிஸ்தானின் ராணுவ ஹெலிகாப்டர்கள் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள நான்கு கிராமங்களை குறி வைத்து குண்டு வீசியதாகவும், பொதுமக்கள் வீடுகள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும் இதில் பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை அடுத்து இஸ்லாமாபாத் நிர்வாகத்திற்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அரசு கடுமையாக கண்டிக்கிறது என்று அதன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். மீண்டும் இது போன்ற தாக்குதல்களை தடுக்க நாங்கள் பதிலடி கொடுப்போம் என்றும், எங்கள் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகள் இடையே போர் தொடங்கினால் அது எந்தத் தரப்புக்கும் சாதகமாக இருக்காது என்பதை பாகிஸ்தான் தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இது இந்த பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும் என்றும் தலிபான் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.