உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் உடனடியாக சரணயடை வேண்டும் எனவும் எதிர்த்து போரிட்டால் கொல்லப்படுவார்கள் எனவும் ரஷ்யா எச்சரித்துள்ளது
ரஷ்யா - உக்ரைன் போர்:
உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போரை தொடங்கியது. இந்நிலையில் 50 நாட்களை கடந்து இன்று வரை உக்ரைனில் ரஷ்யா போர் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் பயங்கர தாக்குதலில் உக்ரைன் உருகுலைந்துள்ளது. பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஏவுகணை தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல், சுமி, லிலிவ், கேர்சன் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்ய படை கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. போர் காரணமாக இதுவரை 48 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது இனப்படுகொலை நடத்தி வருவதாகவும் அப்பாவி பொதுமக்கள் மிக கொடூரமான முறையில் கொல்லப்படுவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டி வருகிறார்.
இனப்படுகொலை:
மேலும் சமீபத்தில் தலைநகர் கீவ்விலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள புச்சா நகரில் தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய படை வெளியேறிய பின்னர், அங்கு சாலைகளில் மக்களில் சடலங்கள் கொத்து கொத்தாக குவிக்கப்பட்டு இருந்த புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல், கீவ் நகரை சுற்றி நடத்த தாக்குதலில், 900க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.இதனிடையே கடந்த ஒரு வாரமாக மரியுபோல் மற்றும் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் ரஷ்ய படை தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனி முக்கிய நகரமான மரியுபோலை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. மரியுபோல் நகரின் முழுப் பகுதியும் உக்ரைனின் படைகளிடம் இருந்து அகற்றப்பட்டது என்றும் மேலும் சில வீரர்கள் மட்டுமே அதன் புறநகரில் உள்ளனர் என்று ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில்,‘‘மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தால், அவர்களின் உயிர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். சரணடைய மறுத்து தொடர்ந்து சண்டையிட்டால், முற்றிலும் அழித்துவிடுவோம்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா எச்சரிக்கை:
ஆனால், உக்ரைன் வீரர்கள் சரணடைய அந்நாட்டு ராணுவம் தடை விதித்திருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மரியுபோல் துறைமுகத்தில் சிக்கியுள்ள உக்ரைன் வீரர்கள் நகரை முற்றுகையிட்டு ரஷியப் படைகளால் கொல்லப்பட்டால், ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர் கட்டுபாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியில் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. ரஷ்யாவுடன் கடந்த 7 வாரங்களாக நடந்த போரில் இதுவரை 3 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் சுமார் 10 ஆயிரம் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்று கூறினார். ரஷ்யாவும் இதுவரை 20,000 வீரர்களை இழந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் தெரிவித்தார். கூறியுள்ளது.