
இந்தியா-இலங்கை ராணுவத்தின் கூட்டுப்பயிற்சியான ‘மித்ரா சக்தி’ நாளை இலங்கையில் தொடங்கி, நவம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தியாவில் இருந்து 6 அதிகாரிகள் கொண்ட 45 வீரர்கள் படை இலங்கை செல்கின்றனர். இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் 4-வது கூட்டுப்பயிற்சி இதுவாகும்.
இது குறித்து இலங்கை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொழும்பில் உள்ள இலங்கை சிங்கா ரெஜிமென்ட் தலைமை அலுவலகத்தில் இந்தியா-இலங்கை ராணுவத்தினரின் கூட்டுப்பயிற்சியான மித்ரா சக்தி 24-ந்தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சி நவம்பர் 6-ந்தேதிவரை நடக்கிறது.
இந்திய ராணுவத்தில் இருந்து 6 அதிகாரிகள் உள்ளிட்ட 45 வீரர்கள் வருகின்றனர். இவர்கள் இலங்கையில் உள்ள ‘லைட் இன்பன்டரி’ படைக்கு இவர்கள் பயிற்சி அளிப்பார்கள்.
இரு தரப்பிலும் உள்ள ஆயுதப்படை மூத்த அதிகாரிகள் பார்வையாளர்களாக இருந்து, இந்தப் பயிற்சியை மதிப்பிடுவார்கள். இலங்கையில் 2-வது முறையாக இந்த பயிற்சி நடக்கிறது.
இந்த பயிற்சியின் நோக்கம், நாடுகளுக்கு இடையே தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து புரிந்து கொள்ளுதல், இருதரப்பு அனுபவங்களை பகிர்தல், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை பயிற்சி அளித்தல் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவதாகும்.
அண்டை நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து ராணுவப் பயிற்சிகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், சீனா ராணுவத்துடன் லடாக் பகுதியிலும், நேபாள ராணுவத்துடனும் இந்திய ராணுவம் பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.