இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே -ரணில் விக்ரமசிங்கே தரப்பு எம்.பிக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் சபாநாயகர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர் நாடாளுமன்றத்தை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து ராஜபக்சேவும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை பதவி நீக்கம் செய்த அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதனால் அங்கு பயங்கர அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இந்த பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று கூட்டப்பட்ட இலங்கை நாடாளுமன்ற கூட்டம் இன்று காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்திற்கு அனைவரும் வருகை தந்தனர்.
.ராஜபக்சே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகைத் தந்தனர். இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவை உரையாற்றுமாறு சபாநாயகர் அறிவித்தார். அப்போது தினேஸ் குணவர்தன எழுந்து நேற்று ஜனாதிபதியால் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வாசிக்குமாறு வலியுறுத்தினார்.
இதை மறுத்த சபாநாயகர் ராஜபக்சே உரையாற்றுவதற்கு அனுமதி வழங்குவதாக அறிவித்தார். எனினும் சபையில் ராஜபக்சேவை பேச விடாமல் நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதை பொருட்படுத்தாத ராஜபக்சே தனது உரையை ஆரம்பித்தார். ஆரம்பத்திலேயே கூச்சலிடுபவர்களை பார்த்து திட்டிய ராஜபக்சே அவர்களைப் பார்த்து நகைச்சுவையாகவும் உரையாற்றினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்க்க பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என ராஜபக்சே கோரிக்கை விடுத்தார். நான் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளேன். ஆகவே, பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதில்லை என கூறினார்.
ராஜபக்சே உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரணில் விக்ரமசிங்கே தரப்பினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜபக்சே -ரணில் விக்ரமசிங்கே தரப்பு எம்.பிக்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்த வாக்கெடுப்பு நடத்த முயற்சி செய்யப்பட்டது. இந்த முயற்சியின் பின்னர் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டதுடன், ராஜபக்சே அணி எம்பிக்கள் சபாநாயகரை சுற்றிவளைத்து தாக்கினர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா, சபாநாயகரை பாதுகாத்ததார்.
இதையடுத்து நாடாளுமன்றத்தை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டு சபாநாயகர் வெளியேறினார். இதைத் தொடர்ந்து ராஜபக்சேவும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.