மீண்டும் பிரதமராகிறார் ரணில்... ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி!

By vinoth kumarFirst Published Nov 14, 2018, 11:37 AM IST
Highlights

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது. நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதால் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது. நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதால் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக இலங்கை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார். 

இதனையடுத்து மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்க உள்ளார். இலங்கையில் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவியை பறித்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை அதிரடியாக நியமித்தார். இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் சிறிசேனா - ராஜபக்சே கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து. 

அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து கடந்த 9-ம் தேதி  உத்தரவிட்டார். ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிபர் சிறிசேனா உத்தரவுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி நலின் பெரேரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாடாளுமன்றத்தை கலைத்த சிறிசேனாவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் ஜனவரி 5-ம் தேதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறுத்தி வைக்கவும் அதிரடியாக உத்தரவிட்டனர். 

இதனையடுத்து இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. அப்போது ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. உடனே ராஜபக்சே வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து ராஜபக்சேவுக்கு எதிராக பெரும்பாலான எம்.பி்.க்கள் வாக்களித்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதால் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக உள்ளார். ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக இலங்கை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார். இதனால் சிறிசேனாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

click me!