இலங்கை குண்டு வெடிப்பு ! சுற்றுலா சென்ற இந்தியர்கள் 4 பேர் பலி … உயிரிழந்தோர் எண்ணிக்கை 215 ஆக உயர்வு !!

Published : Apr 22, 2019, 06:23 AM IST
இலங்கை குண்டு வெடிப்பு ! சுற்றுலா சென்ற  இந்தியர்கள் 4 பேர் பலி … உயிரிழந்தோர் எண்ணிக்கை 215 ஆக உயர்வு !!

சுருக்கம்

ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல் என அடுத்தடுத்து 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை 215 பேர் பலியானர்கள். இதில் 4 பேர் இந்தியர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு, நிகாம்போ, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் நேற்று தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 215 பேர் பலியானார்கள். அவர்களில் 35 பேர் வெளிநாட்டினர் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, பலியான வெளிநாட்டினரில் 4 பேர் இந்தியர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.

கொழும்பு குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் உடல்கள், கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மருத்துவமனையில்  இருந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

பலியான இந்தியர்களின் பெயர்கள் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ், ரஜினா என தெரிவிக்கப்பட்டுள்ளது. . இவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 இந்தியர்கள் பலியான செய்தியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் உறுதி செய்துள்ளார். குண்டு வெடிப்பில் பலியான ரஜினா கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர்.

மங்களூரு பைக்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் குக்காடி. இவருடைய மனைவி ரஜினா . இவர்கள் மும்பையில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அப்துல் காதரும், ரஜினாவும் உறவினரை பார்ப்பதற்காக இலங்கைக்கு சென்றனர். 

ரஜினாவை இலங்கையில் விட்டுவிட்டு அப்துல் காதர், துபாய்க்கு சென்றுவிட்டார். இதனால் ரஜினா, கொழும்பு நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது தான், அவர் தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் சிக்கி ரஜினா உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. உயிரிழந்த மற்ற மூவரின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது..

PREV
click me!

Recommended Stories

இந்தியா-பங்களாதேஷ் எல்லை.. ஈசியாக பார்டரை தாண்டும் இளைஞர்கள்.. வைரல் வீடியோ!
ஆங் சான் சூச்சி உயிருடன் இருக்கிறாரா?.. எந்த தகவலும் தெரியவில்லை.. மகன் கிம் அரிஸ் கவலை!