இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். இந்தியா இலங்கை இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் உயர்த்துவது, வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 2023 ஜூலை 20-21 ஆகிய தேதிகளில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இதை மத்திய அரசும் அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளது. இரு நாடுகளும் தூதரக உறவுகளை துவங்கி 75வது ஆண்டுகள் இந்தாண்டுடன் நிறைவு செய்வதை கொண்டாடும் வேளையில் இலங்கை அதிபரின் இந்திய பயணமும் அமைந்துள்ளது.
இந்தப் பயணத்தின்போது ரணில் விக்ரமசிங்க டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளுடன் பரஸ்பர உறவுகள் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் உயர்த்தும் மற்றும் வலுப்படுத்தும்'' என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற மக்கள் எழுச்சியில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பொருளாதார சிக்கலில் சிக்கி இருந்த இலங்கையின் அதிபராக இக்கட்டான சூழலில் ரணில் அதிபராக பதவியேற்றுக் கொண்டு இருந்தார். இதன் பின்னர் இந்தியாவிற்கு முதன் முறையாக இன்று ரணில் பயணம் மேற்கொள்கிறார்.
அதையெல்லாம் படிக்கக் கூடாது! பிரபலமான ஓரினச்சேர்க்கை நாவலை விற்ற கடைக்கு ரூ.29 லட்சம் அபராதம்!
ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம் அளித்து அதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய திட்டமாக உருவாக்கியுள்ளார். அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதை இலங்கை விரும்புவதாக கடந்த வாரம் ரணில் விக்ரமசிங்க தெரிவித்து இருந்தார். இதை வைத்துப் பார்க்கும்போது, பொருளாதார ரீதியாக இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தத்தில் கைஎழுத்திடலாம் என்று தெரிய வருகிறது.
உலகின் வலிமையான பாஸ்போர்ட் சிங்கப்பூர்: இந்தியாவுக்கு எந்த இடம்?
இலங்கையின் பலவீனமான பொருளாதாரம் தற்போது சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. ரணிலின் இந்தியப் பயணமும் இதன் அறிகுறியாகத்தான் பார்க்கப்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டில்தான் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருந்தது. எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்கி மத்திய அரசாங்கம் உதவி செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.