இலங்கை நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒரு பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இலங்கை - போராட்டம் :
இலங்கை அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. உணவு, எரிபொருளுக்கு மக்கள் திண்டாடுகின்றனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 5 போலீஸார் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று இரவு முதல் நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மகிந்த ராஜபக்சவின் ராஜினாமா தொடர்பான செய்திகள் அனைத்தையும் இலங்கை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘அனைத்து இலாகாக்களில் இருந்தும் எனது ராஜினாமாவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஆட்சி கலைகிறதா ? :
தலைநகர் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர், அதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வீட்டிற்கு அருகில் தாக்குதல் துப்பாக்கிகளை ஏந்திய ஒரு பெரிய குழு பொலிஸ் மற்றும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை அடக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் சனிக்கிழமையன்று பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக தளங்களுக்கான அணுகலையும் முடக்கியுள்ளது. பிரதமரின் மகன் நாமல் ராஜபக்ச இதற்கு எதிராகப் பேசியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தடை நீக்கப்பட்டது.
சனிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கிய 36 மணி நேர ஊரடங்குச் சட்டம் திங்கள் காலை 6 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக குறைந்தது 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "#GoHomeRajapaksas" மற்றும் "#GotaGoHome" தீவு நாட்டில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பல நாட்களாக ட்ரெண்டிங்கில் உள்ளது. இலங்கை அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.