கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் நிலவும் பெட்ரோல், டீசல் தட்டுபாடு காரணமாக இனி ரேஷனில் முறையில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் நிலவும் பெட்ரோல், டீசல் தட்டுபாடு காரணமாக இனி ரேஷனில் முறையில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடி சிக்கி தவித்து வருகிறது. அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக, உணவு, மருந்து, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை கூட இறக்குமதி செய்யமுடியாமல் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள. பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு மக்கள் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்லும் அளவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மேலும் நிலக்கரி, டீசல் பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் தொடர் மின் வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, உணவங்கள் பல மூடப்பட்டு வருகின்றன.அதிகளவு கடன், பண வீக்கம், அந்நிய செலாவணி குறைவு உள்ளிட்ட காரணங்களால் இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசுக்கு வெளிநாடுகளில் 5100 கோடி கடன் இருக்கிறது, இந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்று வெளிப்படையாக இலங்கை அரசு அறிவித்துவிட்டது. அண்டை நாடுகளான இந்தியா, சீனாவிடமிருந்து ஏராளாமன உதவிகளை இலங்கை பெற்று விட்டு நிலையில், தற்போது அவசர நிதியுதவி கேட்டு சர்வதேச நிதியத்தை நாட உள்ளது. வரும் 18ம் தேதி இலங்கை அரசு சார்பில் ஒரு குழு சர்வதேச நிதியத்தைச் சந்தித்து உடனடியாக 400 கோடி டாலர் உதவி கோர இருப்பதாக இலங்கை நிதியமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி, அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. நாளுக்கு நாள் மக்களின் போராட்டம் தீவிரமடைந்து செல்கிறது. முன்னதாக அமைச்சரவையில் அங்கம் வகித்த 26 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், பெட்ரோல் - டீசல் வினியோகத்தில் ரேஷன் முறையை அந்நாட்டு பெட்ரோலிய கழகம் அறிவித்துள்ளது. இதன்படி, 'இரு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக 1,000 ரூபாய்க்கும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 1,500 ரூபாய்க்கும், கார், ஜீப், வேன்களுக்கு 5,000 ரூபாய்க்கும் பெட்ரோல் - டீசல் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ், லாரிகளுக்கு இந்த ரேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.