இலங்கையில் தொடரும் பதற்றம்; நாய் ஆக இருக்க விரும்பவில்லை எனக் கூறி கடற்படையில் 2 பேர் ராஜினாமா!!

Published : Jul 22, 2022, 02:08 PM IST
இலங்கையில் தொடரும் பதற்றம்; நாய் ஆக இருக்க விரும்பவில்லை எனக் கூறி கடற்படையில் 2 பேர் ராஜினாமா!!

சுருக்கம்

கடுமையான கட்டுப்பாடுகளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே விதித்து இருந்தாலும், கொழும்பு நகரில் போராட்டக்காரர்கள் குவிந்து வருகின்றனர். கொழும்பு துறைமுக ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை புதிதாக போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

அரசியல் ரீதியாக இலங்கை அரசு தற்போதைக்கு சரி செய்யப்பட்டு இருந்தாலும், அதிபராக பொறுப்பேற்று இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவிற்கு எதிராக மக்களின் போராட்டம் ஓயவில்லை. போராட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை ரணில் விக்ரமசிங்கே விதித்து இருந்தாலும், கொழும்பு நகரில் போராட்டக்காரர்கள் குவிந்து வருகின்றனர். கொழும்பு துறைமுக ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை புதிதாக போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பொறுப்பேற்ற அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் அதிபர் அலுவலகம் முன்பு குவிந்தனர். ரணிலுக்கு எதிராக குரல் எழுப்பினர். இவர்களைக் கட்டுபடுத்த ராணுவமும் களத்தில் இறக்கப்பட்டது. அதிபர் அலுவலகம் அருகே நேற்று நள்ளிரவில்  கூடி இருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் மற்றும் ராணுவத்தினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதை கண்டித்து இன்று காலை போராட்டக்காரர்கள் கடற்கரை ஒட்டிய கல்லி பேஸ் பகுதியில் குவிந்தனர். 

போராட்டத்தை அடக்குவதற்கு ராணுவம் மட்டுமின்றி, கடற்படை, விமானப்படை என்று அனைத்துக்கும் அதிபர் ரணில் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். போராட்டக்காரர்கள் அதிபர், பிரதமர் அலுவலகங்கள் மற்றும் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று அதிபர் ரணில் கேட்டுக் கொண்டார்.

'கோட்டாகோகாமா' என்ற கோஷத்தை அடுத்து, யாருக்கும் நாயாக இருக்க நாங்கள் விரும்பவில்லை என்று கூறி கடற்படையில் இருந்து  ஜனித் ராஜகருணா, மால்சன் பிரதாபசிங்கே இருவரும் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் சமூக வளைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

''கல்லி பேஸ் பகுதியில் இருக்கும் அதிபர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த முடியாது. போராட்டம் நடத்துவதற்கு என்று ஒதுக்கப்பட்டு இருக்கும் இடத்தில் போராட்டம் நடத்தலாம். அதிபர் செயலகம் பாதுகாப்புப் படையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது எமர்ஜென்சி சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளர் நிஹல் தல்துவா தெரிவித்துள்ளார். 

நேற்று இரவு பாதுகாவலர்கள் தாக்கியதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் காயம் அடைந்துள்ளனர். பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டனர். இலங்கை பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவதே தனது முதல் கடமை என்றும் மற்றவை எல்லாம் பின்னுக்கு தள்ளப்படுவதாக ரணில் தெரிவித்துள்ளார். 

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அடிப்படை உரிமை மீறல் ஆகும் என்று இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இலங்கை மனித உரிமை ஆணையத்தின் தலைவருமான ரோஹினி மாரசிங்கே தெரிவித்துள்ளார். 

Viral : இலங்கை அதிபர் ரணில் அரசின் அடக்குமுறைக்கு கண்டனம்! மீண்டும் ஆர்ப்பாட்ட பேரணி! ஏராளமான மக்கள் பங்கேற்பு

போராட்டம் நடத்தும் இடத்தை விட்டு இன்று கலைந்து செல்வதாகக் கூறி அமைதியான வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது கோழைத்தனமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்து இருக்கிறார்.  

கல்லி பேஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதிகளை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

Dinesh Gunawardena: இலங்கையின் புதிய பிரதமரானார் தினேஷ் குணவர்தன!!

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!