இலங்கை உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு எதிரான போராட்டத்தை அந்நாட்டு காவல்துறை அடக்க முயன்றபோது 15 போராட்டக்காரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் முடிவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க அந்நாட்டு காவல்துறை நடத்திய தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையில் வரும் மார்ச் 9ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட இருந்தது. ஆனால், இந்தத் தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது என்று பிப்ரவரி 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய தேர்தல் தேதி 3ம்தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தேர்தலை ஒத்திவைக்கும் முடிவைக் கண்டித்து எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொழும்புவில் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் அவர்கள் காவல்துறையின் எச்சரிக்கைகளை மீறி, ஜனாதிபதியின் இல்லம், அலுவலகம் மற்றும் பல முக்கிய அரசாங்க கட்டிடங்கள் உள்ள பகுதிக்குள் நுழைய முற்பட்டனர்.
அப்போது இலங்கை காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் அங்கிருந்து போராட்டக்காரர்களைக் விரட்டினர். காவல்துறையின் இந்த நடவடிக்கையால் காயம் அடைந்த 15 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Italy shipwreck: இத்தாலி கடற்பகுதியில் படகு கவிழ்ந்து குறைந்து 59 அகதிகள் பலி
அண்மையில் அந்நாட்டு தேர்தல் ஆணையத்தின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, “தேர்தல் சரியான நேரத்தில் நடத்தப்படும் என்று நான் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தேன். ஆனால், அரசாங்கம் தேவையான நிதியை விடுவிக்காததால் இப்போது எங்களால் அதைச் செய்யமுடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கே அரசின் வருமானம் போதுமானதாக இல்லாத நிலையில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருந்தார்.
அரசு தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்வதாக இலங்கை நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்திப் போராடினர். தேர்தல் நடத்த மறுப்பது ஜனநாயகத்தை நசுக்கும் செயல் என்றும் ரணில் விக்கிரமசிங்கே நாட்டின் பொருளாதார நெருக்கடியை தனக்குச் சாதகமாக பயன்படுத்துகிறார் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விமர்சித்தார்.
ஏறக்குறைய 2.2 கோடி பேர் வசிக்கும் இலங்கையில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணவீக்கம் அதிகரித்து பொருட்களின் விலை அபரிமிதமாகக் கூடியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை உள்ளது. இந்தச் சூழலில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கெடுப்பு நடத்த சுமார் அந்நாட்டு ஒரு கோடி (இலங்கை) ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 22.7 லட்சம் ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் வெடித்தது போராட்டம்... அரசுக்கு எதிராக திரண்ட மக்கள்