நேற்று நள்ளிரவில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உலகத்தை அச்சுறுத்தும் நில நடுக்கம்
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ஆம் தேதி 7.8 ரிக்டர் அளவில் அதி பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நடுரோட்டில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் உலக நாடுகளை அச்சுறுத்திய நிலையில் பல்வேறு நாடுகளில் கடந்த சில நாட்களாக நில அதிர்வு உணரப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவில் பதிவானது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் நேற்று நள்ளிரவு மீண்டும் பல்வேறு நாடுகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
அதிகாலையில் ஏற்பட்ட நில நடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் உள்ளது. நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. 4 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதே போல ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 180 கிலோமீட்டர் ஆழத்தில் பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்