ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 338.. உச்சக் கட்ட கோபத்தில் பொது மக்கள்.. இலங்கையில் தொடரும் நெருக்கடி..!

By Kevin Kaarki  |  First Published Apr 19, 2022, 2:30 PM IST

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு பெட்ரோல் விலை உயர்வு மேலும் சுமையாக மாறி இருக்கிறது. 


இலங்கையில் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 92 ஆக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 338 ஆக உயர்த்தி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 84 அதிகம் ஆகும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு பெட்ரோல் விலை உயர்வு மேலும் சுமையாக மாறி இருக்கிறது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு:

Tap to resize

Latest Videos

இலங்கை ரூபாய் வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெரும் நஷ்டம் ஏர்படுவதால் நேற்று (ஏப்ரல் 18) நள்ளிரவு முதல் புதிய விலை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் விலை மட்டும் இன்றி டீசல் விலை லிட்டருக்கு ரூ. 289 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி இலங்கையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 33.1 சதவீதமும், டீசல் விலை லிட்டருக்கு 64.2 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது. 

விலை உயர்வின் படி இலங்கையில் அமலுக்கு வந்துள்ள புதிய விலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிரிவாக செயல்பட்டு வரும் இலங்கை ஐ.ஒ.சி. விலைகளுக்கு இணையாக மாறி இருக்கிறது.  

கடுமையான பாதிப்பு:

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் வீதிகளுக்கு வந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். எரிபொருள் பற்றாக்குறை, பல மணி நேர மின்வெட்டு போன்ற பிரச்சினைகளுடன், தொழிற்சாலை மூடப்படுவதால் வேலை இழப்பு போன்ற சிக்கல்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா உதவி:

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசுக்கு இந்தியா சார்பில் இதுவரை 2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள், 500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான எரிபொருள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுவரை 3 லட்சம் டன் எரிபொருள் இலங்கைக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டு இருக்கிறது. 

பொருளாதார கொள்கைகளை தவறாக நிர்வாகம் செய்ததால் தான் இலங்கையில் இத்தகைய நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள், எதிர்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அந்நாட்டு இளைஞர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரின் அரசாங்கம் உடனடியாக பதவி விலக கோரி பிரிச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!