உக்ரைன் வீரர்கள் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் வீரர்கள் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதை அடுத்து, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் கொடூர தாக்குல் நடத்தி வருகிறது. தாக்குதல் 54 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் முக்கிய தொழில் நகரங்களில் தாக்குதல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், 2 ஆவது பெரிய நகரமான கார்கிவ், துறைமுக நகரமான மரியுபோல் ஆகிய மாகாணங்களை கைப்பற்றுவது ரஷ்யாவுக்கு கடும் சவாலாக இருந்தது. உக்ரைனின் பதில் தாக்குதலுக்கு ஈடுகொடுத்த வண்ணமே, தனது ஆக்ரோஷமான தாக்குதலால் தொடர்ந்து முன்னேறிய ரஷ்யா, மரியுபோல் நகரை கைப்பற்றியது.
அங்கு கடந்த சில நாட்களாக தாக்குதலை தீவிரப்படுத்தி அந்நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள், அந்நகரையே சூறையாடிவிட்டன. அத்துடன் மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் ஆயிதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டுமென கெடு விதித்திருந்தது. ஆனால் உக்ரைன் வீரர்கள் அதனை புறக்கணித்து விட்டனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ரஷ்ய படைகள், உச்சகட்ட தாக்குதலை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 23,000 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மரியுபோல் நகரில் மட்டும் 4000 பேர் கொல்லப்பட்டதாகவும், உக்ரைனின் 470 ட்ரோன்கள், 998 பீரங்கி துப்பாக்கிகள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மனிதாபிமானமற்ற முறையில் மக்கள் கொன்று குவிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு முறை குண்டு சத்தம் கேட்கும் போதெல்லாம் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் உக்ரைனில் உள்ள 8 முக்கிய நகரங்களை குறிவைத்து பலமுனை தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதாகவும், கிழக்கு பகுதியில் டான்பாஸ் பிராந்தியத்தில் முற்றிலும் அழித்து தன்னிச்சை பகுதியாக உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.