இலங்கையில் இன்று அந்நாட்டின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1948ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை பெற்றது. இலங்கை விடுதலையின் 75 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ள நிலையில் அந்நாட்டில் இன்று சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தலைநகர் கொழும்புவில் உள்ள காலிமுக திடலில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த விழாவில் காமன்வெல்த் தலைவர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து உள்பட பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்தியா சார்பாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் கலந்துகொண்டார்.
இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இலங்கை சென்ற முரளீதரன், அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்குள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களையும் முரளீதரன் சந்திக்கிறார்.
அண்மையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று திரும்பினார். இப்போது இணை அமைச்சர் முரளீதரன் அந்நாட்டுக்குச் சென்றிருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அளிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வரும் சூழலில் இது முக்கியத்துவம் பெறுகிறது.
இதனிடையே, தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்காததை கண்டித்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் இன்று தங்கள் வீடுகளில் கருப்புக்கொடியை பறக்கவிட்டு எதிர்ப்பைக் காட்டுகின்றனர். யாழ்பாணத்தில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டு, சாலைகளை வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது ஆடம்பரமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடவதற்காகவும் அந்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தக் காரணத்தால் எதிர்க்கட்சிகள் அரசின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களைப் புறக்கணித்துள்ளன.
கத்தோலிக்க திருச்சபையும் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தேவாலையத் தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்காததைக் கண்டித்து விழாவைப் புறக்கணித்துள்ளது.
Chinese Spy Balloon: அமெரிக்க வான்வெளிக்குள் சீனாவின் ராட்சத உளவு பலூன்! பென்டகன் எச்சரிக்கை