குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் என்ற இந்திய நிறுவனத்தின் கண் மருந்தால், அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்து, ஐந்து பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அந்த மருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது.
ஆர்டிஃபிஷியல் டியர்ஸ் என்ற அந்த கண் சொட்டு மருந்தை எஸ்ரிகேர் மற்றும் டெல்சம் ஃபார்மா ஆன்லைனில் விநியோகித்துள்ளன. இது பல்வேறு டோஸ்களில், பாட்டில்களில் அமெரிக்கா முழுவதும் ஆன்லைனில் விற்கப்பட்டு வந்தது.
குளோபல் பார்மா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "மிகுந்த எச்சரிக்கையுடன்" கண் சொட்டு மருந்துகளை திரும்பப் பெறுகிறோம். அமெரிக்க அதிகாரிகளுடன் குளோபல் பார்மா முழுமையாக ஒத்துழைக்கிறது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். ஆனால் எங்களது உற்பத்தி இடத்தில் தவறு எதுவும் நடந்ததா என்பது குறித்து இன்னும் நாங்கள் தீர்மானிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆர்டிஃபிஷியல் டியர்ஸ் என்ற இந்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்துவதை நிறுத்துமாறு மக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரத்தம், நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா திரிபு இந்த ஆர்டிஃபிஷியல் டியர்ஸ் கண் சொட்டு மருந்தில் ஏற்பட்டு இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. பாக்டீரியாவின் இந்த திரிபு அமெரிக்காவில் ஒருபோதும் அடையாளம் காணப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''இதுவரை, 12 மாநிலங்களில் 55 பேருக்கு பாக்டீரியா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இதன் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். கண் நோய்த்தொற்று ஏற்பட்ட 11 பேரில் 5 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆர்டிஃபிஷியல் டியர்ஸ் கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியவர்களின் கண்களில் அசௌகரியம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அறிகுறியாக, கண்களில் இருந்து மஞ்சள், பச்சை அல்லது தெளிவான திரவம் போன்ற வெளியேற்றம் இருக்கும், கண் அல்லது கண் இமை சிவந்து காணப்படும், ஒளியை பார்க்க முடியாது, கண் வலி இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.
Chinese Spy Balloon :அமெரிக்க வான்வெளிக்குள் சீனா-வின் ராட்சத உளவு பலூன்: பென்டகன் எச்சரிக்கை
குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் தற்போது கண்காணிப்பு வலையில் சிக்கி இருக்கிறது. இந்தியாவில் இருந்து கடந்தாண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தும் சர்ச்சைக்கு உள்ளானது. காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள குழந்தைகளுக்கு இந்திய தயாரிப்பு இருமல் மருந்து கொடுத்த பின்னர் 12க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்து இருந்தது.