இந்தியாவுக்கு சிவிங்கி புலிகளை வழங்குவதில் மகிழ்ச்சி: தென் ஆப்பிரிக்க அதிபர்!

By Manikanda Prabu  |  First Published Aug 23, 2023, 10:50 PM IST

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கி புலிகளை அறிமுகப்படுத்தும் முயற்சியை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா பாராட்டியுள்ளார்


தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 15ஆவது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கிடையே பிரதமர் மோடியுடன் பேசிய அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா, இந்தியாவுக்கு சிவிங்கி புலிகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளதுடன், பிரதமர் மோடிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கி புலிகளை அறிமுகப்படுத்தும் முயற்சியையும் அதிபர் சிரில் ரமபோசா பாராட்டியுள்ளார்.

“இந்தியாவுக்கு சிவிங்கி புலிகளை நன்கொடையாக வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெரிய பூனை இணங்களை பராமரிக்கும் நாடாக இருப்பதால் இன்னும் அதிகமாக நன்கொடைகளை இந்தியாவுக்கு அளிக்க தயாராக உள்ளோம்.” என்று அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

கடந்த 2022ஆம் ஆண்டு நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு 8 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி மாதம் 12 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா அனுப்பியது. அதில், இந்தியாவில் பிறந்த மூன்று குட்டிகள் உட்பட ஒன்பது சிவிங்கி புலிகள் உயிரிழந்து விட்ட நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் குனோ பூங்காவில் 15 சிவிங்கி புலிகள் எஞ்சியிருக்கின்றன. அதில், ஒரு பெண் குட்டியும் அடங்கும்.

இந்தியாவில் உயிரிழந்த பெருமாலான சிவிங்கி புலிகள், பாக்டீரியா தொற்று, புழுக்கள், சிறுநீரக செயலிழப்பு, காயங்கள் மற்றும் வெப்பத்தால் உயிரிழந்தன.

இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அடுத்த பத்தாண்டுகளில் 100 சிவிங்கி புலிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்படும். 

“அடுத்த பத்தாண்டுகளுக்கு தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 சிவிங்கி புலிகளை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சிவிங்கி புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படும்.” என அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது.

பிரிக்ஸ் விரிவாக்கம்: இந்தியா ஒத்துழைப்பு - பிரதமர் மோடி!

இந்தியாவில் சிவிங்கி புலிகளின் இறப்புக்கு, அதன் வாழ்விடமாக மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்கா தேர்வு செய்யப்பட்டதும் காரணமாக இருக்கலாம் என ஊகங்கள் கிளம்பியுள்ளன. “முதலில் கிர் பூங்காவில் இருந்து சிங்கங்கள் குனோ பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக கூறப்பட்டது. பின்னர், அத்திட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன. சிவிங்கி புலிகள் வறண்ட வானிலையைல் வாழும் நிலையில், குனோவில் நிலவும் ஈரமான வானிலை அவைகளுக்கு உகந்ததாக இல்லை.” என சிலர் கூறுகின்றனர்.

இதனிடையே, எஞ்சியிருக்கும் சிவிங்கி புலிகளை ராஜஸ்தானில் உள்ள முகுந்திரா மலைப்பகுதிக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், முகுந்திரா மலைப்பகுதியில் புலிகள் இருப்பதால், இரண்டுக்கும் இடையே மோதல்கள் ஏற்படக்கூடும் என கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன.

முன்னதாக, பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் பல வகையான பெரிய பூனைகள் இணங்கள் காணப்படுகின்றன. சர்வதேச பெரிய பூனை இணங்களின் கூட்டணியின் கீழ், பிரிக்ஸ் நாடுகள் அவைகளின் பாதுகாப்பிற்காக ஒன்றிணைய முடியும்.” என பெரிய பூனை இணங்களின் பிரச்சினையில் ஒத்துழைக்க பரிந்துரைத்தார்.

click me!