பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் செவ்வாய்க்கிழமை அதிரடியாக கைது செய்யப்பட்டார். அந்த நாட்டின் ஊழல் தடுப்பு ஏஜென்சியின் காவலில் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை வைத்து விசாரிக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று ஆஜராவதற்கு வந்திருந்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அந்த நாட்டின் துணை ராணுவப் படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இவரை குண்டு கட்டாக தூக்கிச் செல்வதைப் போல வேனில் ஏற்றிச் சென்றனர். இது அந்த நாட்டில் பிடிஐ கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருந்தது. இதையடுத்து, அந்த நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. முதலில் கலவரம் வெடிப்பதைத் தடுக்க இஸ்லாமாபாத் மட்டுமே 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பின்னர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டது.
நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை இம்ரான் கானின் பிடிஐ கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். லாகூர், ஃபைசாபாத், குவெட்டா, சுவாட் ஆகிய இடங்களில் தலா ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதாக பிடிஐ கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று மீண்டும் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் துணை ராணுவப் படையினரால் இம்ரான் கான் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். இவரை நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு காவலில் எடுப்பதற்கு ஊழல் தடுப்பு ஏஜென்சி முடிவு செய்து இருக்கிறது. குறைந்தது 15 நாட்கள் வரை காவல் கேட்போம், நீதிமன்றம் குறைந்தது நான்கைந்து நாட்களுக்கு வழங்கும் என்று ஊழல் தடுப்பு ஏஜென்சி தெரிவித்து இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. தேசிய பொறுப்புடைமை சட்டத்தில் 1999ல் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, எந்தவொரு நீதிமன்றமும் வழங்கிய நேரடி காவலின் காலம் 90 நாட்களில் இருந்து 14 நாட்களாக குறைக்கப்பட்டது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் மூத்த அதிகாரிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக இம்ரான் கான் மீது அந்த நாட்டின் ராணுவம் குற்றம் சாட்டிய மறுநாளே கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கைது செய்யப்பட்ட இம்ரான் கானை ஊழல் தடுப்பு ஏஜென்சிக்கான இஸ்லாமாபாத் பிராந்தியத்திற்கான ராவல்பிண்டியில் வசதியான சூழலில் வைக்கப்பட்டு இருப்பதாக அந்த ஏஜென்சி விளக்கம் அளித்துள்ளது. இம்ரான் கான் கடுமையாக நடத்தப்பட மாட்டார் என்றும் மாறாக அவர் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பண மோசடிகள் குறித்து மட்டுமே விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஐ தலைவரான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு சொந்தமான அல்-காதிர் அறக்கட்டளையில் நடந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு இருந்தார். கடந்த மே 1 ஆம் தேதி இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த அறக்கட்டளைக்கு சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமானம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் இம்ரான் கானின் முன்னாள் ஆலோசகர் ஷெசாத் அக்பருக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியாக ஷெசாத் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவரை தேடும் பனி ஏற்கனவே முடிக்கி விடப்பட்டு இருப்பதாக ஊழல் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா எச்சரிக்கை:
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் பாகிஸ்தானில் உள்ள தங்களது நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பயண எச்சரிக்கையை அறிவித்துள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் கலவரம் வெடித்தது. அமைதியின்மை காணப்படுகிறது. இதையடுத்தே, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் தங்களது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.