இந்தியாவில் இருந்து மின்சாரம் இறக்குமதி செய்ய சிங்கப்பூர் முடிவு!

By Manikanda PrabuFirst Published Aug 15, 2023, 10:41 AM IST
Highlights

இந்தியாவில் இருந்து மின்சாரம் இறக்குமதி செய்ய சிங்கப்பூர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

இந்தியா உட்பட பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை வரவேற்பதாக சிங்கப்பூரின் எரிசக்தி சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவும் சிங்கப்பூரும் அவற்றின் மின்சாரக் கட்டமைப்பை இணைக்க முயன்றுவருவதாக வெளிவந்துள்ள தகவல்கள் குறித்த கேள்விக்கு எரிசக்தி சந்தை ஆணையம் இவ்வாறு பதில் அளித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட வட்டார நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் 4 கிகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவுகளை வரவேற்பதாக எரிசக்திச் சந்தை ஆணையம் கூறியுள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை இதற்கான ஏலம் கோரப்படுகிறது. அதன்பிறகு, மின்சாரத்தை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டாரத்தில் உள்ள நாடுகளிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய கடந்த மே மாதம் 20க்கும் மேற்பட்ட முன்மொழிவுகளைப் பெற்றதாகவும் எரிசக்திச் சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியா - சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் அவற்றின் மின்சாரக் கட்டமைப்பை கடலடிக் கம்பிவடம் மூலம், அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக இணைக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தியா புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை சிங்கப்பூருக்கு விற்பனை செய்ய அது வழிவகை செய்யும் எனவும் கூறப்பட்டது. அத்தகைய நடவடிக்கையை நிபுணர் குழு ஒன்று ஆராய்வதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்திய மின்சாரக் கட்டமைப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் அக்குழுவில் அடங்குவர். அவர்கள் இவ்வாண்டின் பிற்பகுதியில் இந்த விவகாரம் தொடர்பாக கலந்துபேச சிங்கப்பூர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் கடுமையான விலை ஏற்றத்தாழ்வுகள் காரணமாக மின்சார சந்தை உறுதியற்ற தன்மையில் பிரச்சினையாக உள்ளது. எனவே, நம்பகமான மற்றும் மலிவு மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாற்று மின்சார ஆதாரங்கள் தேவைப்படுகிறது. இதற்காக, மற்ற நாடுகளில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்வதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என தெரிகிறது.

உலகில் வாழத் தகுந்த நகரங்கள் டாப் 20ல் சிங்கப்பூர்! சென்னை, பெங்களூருக்கு எந்த இடம் தெரியுமா?

நிலப்பற்றாக்குறை, சூரிய சக்தி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக, நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை விரிவுபடுத்துவதற்கு பிராந்திய மின்கட்டமைப்பு உட்பட பல்வேறு விருப்பங்களை ஆராய்வதாக சிங்கப்பூர் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அந்தமான் - நிகோபர் தீவுகளும் மின்சார சவால்களை எதிர்கொள்கிறது. பல்வேறு தீவுகள் அடங்கிய அந்த யூனியன் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி திறனில் டீசல் உற்பத்தி கிட்டத்தட்ட 91 சதவீதம் ஆகும். மீதமுள்ளவை நீர் மின்சாரம் மற்றும் சூரிய சக்தியை உருவாக்குவதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே, சிங்கப்பூருடனான ஏற்பாடு, அந்தமான் நிகோபர் தீவுகளின் இணைப்புக்கு, குறிப்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் அடிப்படையில் பயனளிக்கும் என தெரிகிறது.

அதேபோல், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுடனும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வர்த்தகத்தில் மின் கட்டமைப்பை இணைப்பது குறித்து இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!