இந்தியா - – இஸ்ரேல் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து...தீவிரவாத எதிர்ப்பில் கூட்டாக செயல்பட முடிவு….

First Published Jul 5, 2017, 10:17 PM IST
Highlights
seven agreements signed between India and Isreal


ஜெரூசலேம், ஜூலை 6:- தீவிரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்புடன் செயல்படுவது என்று பிரதமர் நரேந்திர மோடி, – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே விண்வெளி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் 7 ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வரலாற்று பயணம்

பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக இஸ்ரேல் நாட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். இஸ்ரேலுடன் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெற்றதை குறிக்கும் வகையில் மோடியின் இந்த பயணம் அமைந்துள்ளது. இந்திய வரலாற்றில் பிரதமர் ஒருவர் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வது என்பது இதுவே முதல் முறையாகும். டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நேரில் வந்து வரவேற்றார்.

மோடிக்கு சிறப்பு மரியாதை

அமெரிக்க அதிபர் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப் ஆகியோரை தவிர்த்து மற்ற எவரையும் இஸ்ரேல் பிரதமர் நேரில் வந்து வரவேற்க மாட்டார். அந்த மரபுகளை மீறி நெதன்யாஹு மோடிக்கு மரியாதை அளித்தார். வரவேற்பு நிகழ்ச்சிகள் சுமார் 45 நிமிடங்கள் நடந்தன. அப்போது இந்தி மொழியில் பேசி மோடியை நெதன்யாஹு வரவேற்றார். இந்தியா – இஸ்ரேல் உறவுக்கு வானம் இல்லை என்றும் விண்வெளியிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் நெதன்யாஹு தனது உரையில் குறிப்பிட்டார்.

அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை

இந்த நிலையில், 2-வது நாளான நேற்று இரு நாட்டு பிரதமர்களுக்கு இடையே அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, இரு தரப்பு உறவுகள், வேளாண்மை, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். தீவிரவாதம் என்பது இரு நாடுகளுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தல் என்ற முடிவுக்கு வந்த அவர்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் ஒத்துழைப்புடன் செயல்படுவது என முடிவு செய்தனர்.

கூட்டு அறிக்கை

பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கூட்டாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சர்வதேச அமைதிக்கும், அரசியல் நிலைப்புத் தன்மைக்கும் தீவிரவாதம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனை எதிர்ப்பதில் இரு தலைவர்களும் உறுதியாக இருப்பதென்று முடிவு செய்தனர். தீவிரவாதத்திற்கு குறிப்பிட்ட எல்லை கிடையாது; எங்கு வேண்டுமானாலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும். தீவிரவாத குழுக்கள், அவர்களுக்கு உதவி செய்வோர், நிதி மற்றும் புகலிடம் வழங்குவோர் ஆகியோரை ஒடுக்க மோடியும், நெதன்யாஹுவும் முடிவு செய்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பபட்டுள்ளது.

வேளாண் - விண்வெளி

இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா – இஸ்ரேல் இடையே விண்வெளி, வேளாண்மை, நீர்வள பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தியா – இஸ்ரேல் தொழில் ஆய்வு மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கத்திற்காக மேலும் 40 மில்லியன் டாலர் (ரூ. 260 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி - நம்பிக்கை

ஒப்பந்தங்கள் குறித்து மோடி பேசுகையில், இந்தியா ,– இஸ்ரேல் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இரு நாடுகளுக்குமான வளர்ச்சி ஏற்படுத்துவார்கள் என்றும், பல்வேறு துறைகளில் எண்ணற்ற பலன்களை ஏற்படுத்துவார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். அந்த இலக்குகளை எட்டுவதற்காக ரூ. 260 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருவழி வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை செய்வதன் மூலமாக இந்தியா – இஸ்ரேல் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்த முடியும் என்று நானும், நெதன்யாஹுவும் முடிவு செய்தோம். இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

நீர்வளம் பெருகும்

ஒப்பந்தங்கள் குறித்து மோடி பேசுகையில் இஸ்ரேலுடன் நீர்வளத்துறையில் மட்டும் 2 ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றார் இந்திய நீர்வளத்துறையில் நல்லதொரு மாற்றங்கள் ஏற்படும். புதுமைகளை படைப்பது, நீர் மேலாண்மை, விவசாயம், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் மற்ற நாடுகளை விடவும் இஸ்ரேல் முன்னணியில் உள்ளது. நீர் ஆதாரங்களை முறையாக பயன்படுத்துவது, நீர் வளங்களை பாதுகாப்பது, சுத்தம் செய்வது, வேளாண் உற்பத்தியை பெருக்குவது ஆகிய விவகாரங்கள் இரு தரப்பு உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

வேளாண் திட்டம்

வரும் 2018 முதல் 2020 வரை 3 ஆண்டுகளுக்கு இந்தியா - – இஸ்ரேல் வேளாண் மேம்பாட்டு திட்டம் ஒன்று மோடி – நெதன்யாஹு பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதோடு, செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.

 

 

 
click me!