சொல்லிட்டே இருக்க மாட்ட.. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. ஸ்வீடனை பகிரங்கமாக எச்சரிக்கும் ரஷ்யா.!

By vinoth kumarFirst Published Feb 26, 2022, 7:31 AM IST
Highlights

உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடன் பின்விளைவுகளை சந்திக்கும். மேலும், நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். 

நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன், பின்லாந்து முயற்சி செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்  என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்த்து வந்தது. இதனால், ரஷ்யா உக்ரைன் மீது எந்த நேரத்திலும் தாக்குதல்  நடத்தப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்து வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். 

ஏற்கனவே, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இருப்பினும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளின் ஆதரவு ரஷ்யாவுக்கு உள்ள நிலையில், புதின் இந்த தடைகளைக் கண்டு எல்லாம் அஞ்சியதாகத் தெரியவில்லை. இதனிடையே, உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்பும் திட்டமில்லை என அமெரிக்காவும், நேட்டோ கூட்டமைப்பும் கூறிய நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி  வேதனை தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்திருப்பதாக செலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால், கடுப்பான ரஷ்யா ஸ்வீடனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறுகையில்;- உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடன் பின்விளைவுகளை சந்திக்கும். மேலும், நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். 

click me!